சிதம்பரம், சீர்காழிக்கு பஸ் இயக்கப்படுமா?

பழையாறு துறைமுகத்தில் இருந்து புதுப்பட்டினம் வழியாக சிதம்பரம், சீர்காழிக்கு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-03-12 18:45 GMT

கொள்ளிடம்:

பழையாறு துறைமுகத்தில் இருந்து புதுப்பட்டினம் வழியாக சிதம்பரம், சீர்காழிக்கு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கிட்டியணை உப்பனாறு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதுப்பட்டினம், புளியந்துறை, கோதண்டபுரம், நல்லூர், ஆச்சாள்புரம், தண்டேசநல்லூர், கொள்ளிடம் வழியாக சிதம்பரம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு நேரடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

புதுப்பட்டினத்திற்கும், புளியந்துறைக்கும் இடையே கிட்டியணை உப்பனாறு போக்குவரத்துக்கு தடையாக இருந்ததால், பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதுப்பட்டினம் மற்றும் புளியந்துறை வழியாக வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் புதுப்பட்டினத்தையும், புளியந்துறையையும் இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.

25 கி.மீ. சுற்றிச்செல்லும் அவலம்

இந்த பாலம் கட்டுவதற்கு முன்பு உப்பனாற்றை கடப்பதற்கு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் படகை பயன்படுத்தி வந்தனர். வாகனங்கள் மூலம் செல்ல வேண்டும் என்றால் 25 கி.மீ. தூரம் சுற்றித்தான் செல்ல வேண்டும். ஆனால் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டதால் பழையாறு துறைமுகத்தில் இருந்து, புதுப்பட்டினம், புளியந்துறை பகுதிகளுக்கு இடையே உள்ள தூரம் வெறும் 500 மீட்டராக உள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் பஸ் இயக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் புதுப்பட்டினத்தில் இருந்து புளியந்துறை, கோதண்டபுரம், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் புளியந்துறை கிராமத்தில் இருந்து புதுப்பட்டினத்தில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், பழையாறு துறைமுகத்துக்கு செல்லும் தொழிலாளர்களும் பஸ் போக்குவரத்து இல்லாததால் சைக்கிள் மற்றும் மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அரசு பஸ் இயக்க வேண்டும்

எனவே பழையாறு துறைமுகத்தில் இருந்து புதுப்பட்டினம் மற்றும் புளியந்துறை, கோதண்டபுரம், ஆச்சாள்புரம், கொள்ளிடம் வழியாக சீர்காழி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்கினால், 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் அரசு பஸ் இயக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்