பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
திருப்பயத்தங்குடியில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருப்பயத்தங்குடியில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பாலம் அமைக்கும் பணி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வளப்பாற்றில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.1 கோடியே 55 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த வழியாக திருப்பயத்தங்குடி, பில்லாளி, திருச்செங்காட்டங்குடி, தென்னமரக்குடி, கீழப்பூதனூர், நத்தம், வீரபெருமாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் அச்சம்
இந்தநிலையில் பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பாலம் கட்டும் பணியால் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளப்பாற்றில் பாசனம் பெறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்குமா? என்ற அச்சத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்காமல் உள்ளனர்.
நடவடிக்கை
இந்த பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.எனவே, பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.