தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை... குக்கிராமமாக காட்சியளிக்கும் நிலை மாறுமா?

45 வார்டுகளை கொண்ட கடலூர் மாநகராட்சியில் தினமும் ஒரு வார்டில் உள்ள குறைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 4-வது வார்டு குறித்து பார்ப்போம்.

Update: 2022-07-08 17:15 GMT

குக்கிராமம்

இந்த வார்டில் வில்வநகர், வில்வ நகர் காலனி, புதுத்தெரு, புதுக்காலனி, பழைய காலனி (பாப்பான்தோட்டம்), வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சியில் இன்னும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத பகுதியாக இந்த வார்டு உள்ளது. மாநகராட்சிக்குள் ஒரு குக்கிராமமாக இந்த வார்டு உள்ளது. ஆம், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் இன்னும் கூரை மற்றும் ஓட்டு வீடுகளிலேயே வசித்து வருகின்றனர்.

மாநகராட்சியில் உள்ள அந்த வார்டுக்குள் சென்றாலே ஒரு கிராமத்திற்குள் சென்ற உணர்வு தான் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு அதிகாரிகளின் பார்வை படாமல், எவ்வித முன்னேற்றமும் இன்றி காணப்படுகிறது.

மின்விளக்குகள் எரிவதில்லை

குறிப்பாக இந்த வார்டு பகுதியில் உள்ள பெரும்பாலான தெருமின்விளக்குகள் எரிவதில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தவில்லை. இப்பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் இதுவரை கழிவுநீர் கால்வாய் கூட அமைக்கப்படவில்லை. இதனால் சாலைகளிலேயே கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும் தெருக்களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. தூர்ந்து போன கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

புதைவட பணிகள்

இதுகுறித்து அந்த வார்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கூறுகையில், மாநகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் புதைவட கேபிள் பதிக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், நகரின் மையப்பகுதியில் உள்ள 4-வது வார்டில் இதுவரை புதைவட பணி செயல்படுத்தப்படவில்லை.

இதனால் எங்கள் பகுதியில் உடனே புதைவட பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழுப்பு நிறத்தில் வரும் தண்ணீர்

குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. வாரத்தில் 3 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. அப்படி வந்தாலும் தண்ணீர் பழுப்பு நிறத்தில் தான் வருகிறது. அதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பது எங்கள் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இருப்பினும் இதுவரை அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதனால் எங்கள் பகுதியிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, தடையின்றி குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வடிகால் வாய்க்கால் தேவை

அந்த வார்டை சேர்ந்த வக்கீல் ஜவகர் சுபாஷ் கூறுகையில், கடலூர் மாநகராட்சி 4-வது வார்டு மழைக்காலங்களில் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. இங்கே முறையான வடிகால் வாய்க்கால் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. அதனால் வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வார்டில் அதிகளவில் நலிவடைந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

சமுதாய கூடம்

தற்போது இந்த வார்டு மக்கள், சுபநிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தி வந்த சமுதாய நலக்கூடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்காததால், மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

மேலும் நூலக கட்டிடமும், சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடமும் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளைஞர்களின் வசதிக்காக உடற்பயிற்சி கூடமும் அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும் மாணவர்களின் வசதிக்காக நூலகம் அமைக்க வேண்டும். அங்கன்வாடி கட்டிடம் தனியாக கட்டிக் கொடுக்க வேண்டும். குப்பைகளை நாள்தோறும் அகற்றுவதுடன், ஒவ்வொரு தெருவிலும் குப்பை தொட்டி வைக்க வேண்டும். பயன்பாடின்றி கிடக்கும் பொது கழிவறை கட்டிடம், ரேஷன் கடை கட்டிடம் உள்ளிட்டவற்றை இடித்து விட்டு பிற பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

குடிசை வீடுகள்

மேலும் இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடிசைகள் அமைந்துள்ளன. அதற்கு பதிலாக குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். இங்கு வசிக்கும் மக்களுக்கு கல்வி கடன், தாட்கோ கடன் வங்கிகளில் மறுக்கப்படுகிறது. அதனை பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்