வடகாட்டில் வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அமைக்கப்படுமா?

வடகாட்டில் வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-09 18:25 GMT

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாயம்

வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், வாழை, சோளம், கரும்பு, கடலை, எள், உளுந்து, மிளகாய், கத்தரி, வெண்டை மற்றும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகிறார்கள். மேலும் இ்ங்கு தென்னை அதிகளவில் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோவில் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மானாவாரி விவசாயமும், அறந்தாங்கி, மணமேல்குடி ஆகிய பகுதிகளில் ஆறுகளில் தண்ணீர் வந்தால் தான் விவசாயம் என்ற நிலை இருந்து வரும் நிலையில், வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

அறுவடை எந்திரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியம், 497 ஊராட்சி, 2 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் மொத்தம் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ஆனால் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்கள் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் மட்டுமே இயங்கி வருகின்றன. இங்கு இருந்து தான் வேளாண் துறை சார்ந்த அறுவடை எந்திரம், டிராக்டர், கடலை, அரிசி போடும் எந்திரம், நடவு செய்யும் எந்திரம், களையெடுப்பு கருவிகள் என எண்ணற்ற நவீன வேளாண் கருவிகள் வாடகை முறையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இத்தகைய நவீன கருவிகள் யாவும் அந்தந்த பகுதிகளில் உள்ள பெரும் விவசாயிகளுக்கு தான் அதிகளவில் பயன்பாட்டிற்கு சென்று விடுவதால், ஏழை, எளிய விவசாயிகளுக்கு இவைகள் கிடைப்பது எட்டாக்கனியாகவே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய நவீன வேளாண் கருவிகள் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆலங்குடி, வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை தமிழக அரசு அமைத்து கொடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

வேளாண் பொறியியல் துறை அலுவலகம்

நீலகண்டன்:- வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் மட்டுமே வேளாண் பொறியியல் துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு இருந்து தான் அறுவடை எந்திரம், நடவு செய்யும் எந்திரம், களையெடுப்பு கருவிகள் வாடகை முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வேளாண் பண்ணை நவீன கருவிகளை பல விவசாயிகள் பார்த்ததே இல்லை. எனவே இப்பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இடுபொருட்களின் விலை அதிகரிப்பு

முத்தையா:- வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வேளாண் இடுபொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் விவசாய பணிகளில் ஈடுபட கூலி தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகி வருகின்றன. இதனால் நவீன வேளாண் கருவிகள் குறித்த கண்காட்சி மற்றும் அதன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூற வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதகாரிகள் இப்பகுதியில் வேளாண் பொறியியல் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் கருவிகள்

முத்துதுரை:- வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, கடலை, உளுந்து மற்றும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களையும் அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால் இப்பகுதி விவசாயிகள் நவீன வேளாண் கருவிகள் மூலமாக விவசாய பணிகளை மேற்கொண்டு வருவது என்பது அரிதாகவே இருந்து வருகிறது. இந்தநிலை மாற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

சுரேஷ்:- வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சாகுபடி செய்யப்படும் விளை பொருட்கள் மாவட்டத்தின் பிற பகுதிகள், அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் முன்னேற்றம் காண நல்ல பல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர முன் வர வேண்டும்.

போதிய வருமானம் கிடைப்பதில்லை

செல்லத்துரை:- விவசாய விளை பொருட்கள் மூலமாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் போதிய அளவிற்கு கிடைப்பது இல்லை. ஏனெனில் இப்பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் எந்தவொரு விவசாய பலன்தரும் திட்டங்களும் இல்லை. வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அமைந்தாலாவது விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க வழிவகை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்