சிக்னல் விளக்குகள் பயன்பாட்டிற்கு வருமா?

சிக்னல் விளக்குகள் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-12-03 18:45 GMT

திருவாரூரில் நகரில், காட்சி பொருளாக உள்ள சிக்னல் விளக்குகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன போக்குவரத்து அதிகரிப்பு

திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையினால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சந்திப்பு சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுத்திடவும், போக்குவரத்தை சீரமைத்திடவும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் சிக்னல் விளக்குகள் எரிந்து போலீசார் போக்குவரத்தினை சீரமைத்து வந்தனர். ஆனால் காலபோக்கில் இந்த சிக்னல் கம்பங்கள் போதிய பராமரிப்பு இன்றி பயன்பாடுன்றி உள்ளது.

இதில் நகரில் அமைக்கப்பட்டிருந்த பல சிக்னல் கம்பங்கள் காணாமல் போனது. தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே சிக்னல் கம்பங்கள் உள்ளது. இந்த கம்பங்கள் பயனற்ற நிலையில் காட்சி பொருளாக இருந்து வருகிறது.

குறிப்பாக தஞ்சை சாலை கல்பாலம் பகுதியில் தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிக்கு செல்லும் பிரிவு சாலைகள் உள்ளது. இங்கு அதிகமாக வாகன போக்குவரத்து நெருக்கடி உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

விபத்து ஏற்படும் அபாயம்

திருவாரூர் தஞ்சை பிரதான சாலையில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையம் பகுதியில் பஸ்கள் உள்ளே செல்ல வெளியே இருவழிகள் உள்ளது. இந்த இடம் திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளதால் எந்தநேரமும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. எனவே சிக்னல் வசதி இல்லாததால் பஸ்கள் உள்ளே செல்வதும், வெளியே வருவதிலும் பல்வேறு சிரமங்களும், விபத்து ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது.

எனவே திருவாரூர் நகரில் பிரதான சாலைகளில் விபத்துக்களை தடுத்திடவும், போக்குவரத்தினை சீரமைத்திடவும் சிக்னல் விளக்குகள் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்

திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது இசாக்:-

திருவாரூர் மாவட்ட தலைநகரமாக இருந்தபோதிலும் அதற்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. நகரின் பகுதி வழியாக தஞ்சை-நாகை பிரதான சாலையாக செல்கிறது. இதனால் இந்த சாலையில் எந்தநேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த வழிபாதையில் தான் பஸ் நிலையம் மற்றும் மன்னார்குடி, கும்பகோணம் பிரிவு சாலை அமைந்துள்ளது.

ஆனால் எந்த இடத்தில் சிக்னல் விளக்கு என்பது இல்லாமல் உள்ளது. ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் பயன்பாடுன்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்தினை தடுத்திட இந்த பிரதான சந்திப்பு பகுதிகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். எந்தநேரமும் போக்குவரத்தினை சீரமைத்திட போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்