பூட்டி கிடக்கும் சிறுவர் பூங்காக்கள் புத்துயிர் பெறுமா?

பழனி நகரில் பூட்டி கிடக்கும் பூங்காக்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-08 19:45 GMT

பழனி நகர் பகுதியில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நகராட்சி சார்பில் பல இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு விளையாட்டு உபகரணங்கள், பூச்செடிகள், மரங்கள் உள்ளது. தினமும் காலை, மாலையில் அந்தந்த பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பொழுதை கழித்து சென்றனர். குறிப்பாக வாரவிடுமுறை நாட்களில் பலரும் வந்து செல்கின்றனர். அதேபோல் முதியோர்களும் நடைபயிற்சி செல்லும் இடமாகவும் இருந்தது.

இந்நிலையில் பழனி நகரில் உள்ள பல பூங்காக்கள் தற்போது பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து வருகிறது. குறிப்பாக உழவர்சந்தை அருகே உள்ள அண்ணா நகர் பூங்கா, ராஜாநகர் பூங்கா போன்றவை பூட்டிய நிலையில் பயன்பாடு இன்றி உள்ளதால் அங்குள்ள உபகரணங்கள் எல்லாம் வீணாகி வருகிறது. எனவே பழனியில் உள்ள பூங்காக்களை திறந்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இன்றைய சூழலில் பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளையில் அவர்களை வெளியில் விளையாட அனுப்பினால் ஓடியாடி விளையாட போதிய இடம் இல்லை. சிறுவர்கள் ஓடியாடி விளையாடுவதற்காக தான் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பழனி நகரில் பெரும்பாலான பூங்காக்கள் பூட்டியே உள்ளன. எனவே பழனியில் பூட்டி கிடக்கும் பூங்காக்களை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்