ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பும் பாலில் கலப்படம்
சோளிங்கர் அருகே சென்னை ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பும் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
பாலில் கலப்படம்
சென்னை கொரட்டூர் ஆவின் நிறுவனத்துக்கு சோளிங்கர், நெமிலி மற்றும் அரக்கோணம் ஆகிய வட்டங்களில் இருந்து தினமும் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சோளிங்கர் ஒன்றியம் அக்கட்சிகுப்பம் ஊராட்சி ஜானாகாபுரம் பகுதியில் இருந்து பால் அனுப்பப்படும் வேன் ஒன்றில், பாலில் கலப்படம் செய்து அனுப்புவதாக ஆவின் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆவின் நிறுவன கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில், காவல் துறையினர், ஆவின் அலுவலர்கள் சோளிங்கர் அடுத்த ஜானாகாபுரம் கிராமத்துக்கு சென்று அப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து பாலை சேகரித்து அனுப்பி வரும் 70 வயது நபர் ஒருவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் சோதனை
அப்போது, ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்படும் பாலில் இருந்து வெண்ணை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக பால் பவுடரை கலக்கி அனுப்புவது தெரியவந்தது.
மேலும் அவரது வீட்டில் 150 கிலோ வெண்ணெய், 6 மூட்டைகளில் 140 கிலோ பால் பவுடர் மற்றும் கலப்படம் செய்வதற்காக வைத்திருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அங்கிருந்து ஆவினுக்கு அனுப்ப வைத்து இருந்த 5 லிட்டர் பாலில் இருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டனர்.
இதுதொடர்பான விசாரணைக்கு போலீசார் அழைக்கும்போது சென்னை ஆவின் நிறுவன கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் அவரிடம் கூறினர். மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு கலப்படம் செய்தது உண்மை என தெரியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.