இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடக்குமா?

நாகை மாவட்ட கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடக்குமா? என்ற தவிப்பில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

Update: 2023-08-27 18:45 GMT


நாகை மாவட்ட கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடக்குமா? என்ற தவிப்பில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

பின்னடைவை சந்தித்த குறுவை

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இதற்காக நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நாகை கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் வந்து சேரவில்லை.

பெயரளவுக்கு வந்த தண்ணீரால், பெரும்பாலான இடங்களில் குறுவை சாகுபடி பின்னடைவை சந்தித்தது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வறண்ட பாலைவனம் போல் காட்சியளித்தது. குறுவை சாகுபடி தான் கைவிட்டதே, என்று சம்பா சாகுபடி மேற்கொள்ளலாம் என்றால் அதற்கான தண்ணீரின் ஆதார அறிகுறியே இல்லை.

உழவு பணி

இதனால் நாகை கடைமடை விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள விதை நெல்லை இது நாள் வரை கையில் எடுக்கவில்லை. குறுவை சாகுபடியில் கைவிடப்பட்ட நிலங்களை சம்பா சாகுபடிக்காக உழுது தயார்படுத்தி வருகின்றனர். அதுபோக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக நிலத்தை விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.

இருந்தும் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைக்குமா? என்கிற குழப்பத்தில் நாகை கடைமடை விவசாயிகள் தவிப்புடன் காத்திருந்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:-

அழிவிலிருந்து தப்பிக்கும்

விவசாயி கமல்ராம்:-

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போதுமானதாக இல்லாததால், நாகை கடைமடை விவசாயிகள் நடப்பு குறுவை சாகுபடியில் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்து உள்ளனர். குறுவை சாகுபடி தான் கை கொடுக்கவில்லை என்கிற நிலையில், சம்பா சாகுபடியை தொடங்கலாம் என்றால் அதற்குண்டான தண்ணீரும் இல்லை. வழக்கமாக ஆகஸ்டு 2-வது வாரத்தில், சம்பா விதைப்பு பணிகளை தொடங்கி, 4-வது வாரத்தில் முடித்து விடுவோம். இந்த காலகட்டத்தில் சம்பா விதைப்பு பணிகளை தொடங்கினால் தான், வடகிழக்கு பருவ மழையின் போது நெற்பயிர்கள் அழிவிலிருந்து தப்பிக்கும்.

குறுவை சாகுபடியில் நஷ்டம்

ஆனால் தற்போது வரை போதிய தண்ணீர் இல்லை என்பதால், சம்பா சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் தவித்து வருகிறோம். காலம் கடந்து கிடைக்கும் தண்ணீரை வைத்து சம்பா சாகுபடியை தொடங்கினால், வளர்ச்சி குறைந்த நிலையில் வடகிழக்கு பருவமழையில் நெற்பயிர்கள் அனைத்தும் மூழ்கி அழிந்து விடும்.

எனவே இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் பெருத்த நஷ்டத்தையும், பின்னடைவையும் சந்தித்த நாகை கடைமடை விவசாயிகள், சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா? என்கிற தவிப்பில் இருந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்றார்.

சாகுபடி செய்த வயல்கள் பாதிப்பு

நாகையை சேர்ந்த விவசாயி தமிழ்ச்செல்வன்:-

தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும், போதுமான காவிரி தண்ணீர் கிடைக்காததாலும், நாகை கடைமடை பகுதியில் குறுவை நெல் சாகுபடி செய்த வயல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாகை, கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பகுதி அளவிலான பாதிப்பும், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பேரளவுக்கு நடந்த குறுவை சாகுபடியால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை அடைந்துள்ளனர்.

கேள்விக்குறியாக உள்ளது

இவ்வாறு வரட்சியால் பாதிக்கப்பட்ட விலை நிலங்களை உடனடியாக கணக்கீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினால் தான், மறு சீரமைப்பு சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் ஆதாரம் குறைந்ததால், இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்