ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுமா?

ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி வகைகளை தரமானதாக வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-26 19:06 GMT

இலவச அரிசி

தமிழகமெங்கும் இலவசமாக, குண்டு, குச்சி, பச்சரிசி போன்ற அரிசி வகைகள் ரேஷன் கடைகள் மூலமாக, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இவை குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் மாதந்தோறும் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக, வினியோகம் செய்யப்பட்டு ஏழை, எளிய மக்கள் முதல் நடுத்தர வர்க்கம் வரை இவற்றை அன்றாடம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

தரமற்ற அரிசி

ஆனால் இவ்வாறு ரேஷன் கடைகள் மூலமாக, வினியோகம் செய்யப்படுகின்ற அரிசிகள் ஒரு சில சமயங்களில் மிகவும் தரமற்ற வகைகளில் கல் மற்றும் வண்டு, பூச்சி போன்றவைகளுடன் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகவும், சமூக ஆர்வலர்கள் பலரும் குறை கூறி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்ற குச்சி அரிசியை தவிர பிற அரிசி வகைகளை பொதுமக்கள் அதிகம் விரும்பவில்லை எனவும், இவற்றை வேறு வழியின்றி வாங்கி செல்வதாகவும், இவ்வாறு வாங்கி செல்லப்படுகின்ற அரிசிகள் பெரும்பாலான வீடுகளில் கோழி தீவனமாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது எனவும் கூறுகின்றனர்.

மேலும் ரேஷன் கடைகளில் வழங்கபடுகின்ற அரிசிகளை கொண்டு சமையல் செய்கையில் அவை குண்டு, குண்டாக இருப்பதால் உண்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதில்லை எனவும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இவற்றை மென்று முழுங்க வெகுவாக சிரமப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலரும் ரேஷன் அரிசியை தவிர்த்து, கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்டை தீட்டப்பட்ட இலகு ரக அரிசி வகைகளை வாங்க மாதந்தோறும் பெரும் தொகையை ஏழை, எளிய நடுத்தர மக்கள் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அரிசி விற்பனை

மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை கிலோ ரூ.10 என்ற விலையில் நேராக வீடுகளுக்கே சென்று ஒரு சில ஓட்டல் கடைக்காரர்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இதேபோல் தரமற்ற அரிசி வகைகளை பொதுமக்களிடம் வழங்குவதால் இவைகள் பெரும்பாலும் கோழி தீவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் ரேஷன் அரிசிகள் மூட்டை மூட்டையாக கடத்தல் போன்ற செய்திகள் நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் வெளிவந்த நிலையில் உள்ளன. பொதுமக்களுக்கு தரமான அரிசிகளை ரேஷன் கடைகளில் வழங்கினால் ஏன் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற செய்திகள் வரப்படுகிறது எனவும் இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

இயற்கை உணவுகளை வழங்க வேண்டும்

வடகாடு பகுதியை சேர்ந்த நடேசன்:- எங்கள் காலத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற இயற்கை உணவுகளை உண்டு திடகாத்திரமாக வாழ்ந்து மறைந்தோர் ஏராளம். முன்பெல்லாம் அரிசி சாதம் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தான் கிடைக்கும். ஆனால் தற்போது, அரிசி அதுவும் பட்டை தீட்டப்பட்ட அரிசி மற்றும் துரித உணவுகளால் மக்களின் ஆயுட்காலம் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. எனவே இயற்கை உணவுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து அவற்றை ரேஷன் கடைகள் மூலமாக வழங்க வேண்டும்.

தரமான அரிசி வழங்க வேண்டும்

மாரியாயி:- ரேஷன் கடைகளில் இலவசமாக கிடைக்கும் அரிசியை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவைகடினமாக இருப்பதால் வயதான காலத்தில் அவற்றை மென்று முழுங்க சிரமப்பட்டு வருகிறோம். எனவே தரமான அரிசிகளை அரசு வழங்க வேண்டும்.

குழந்தைகள் தவிர்த்து விடுகின்றனர்

கணேசன்:- ஒரு சில சமயங்களில் ரேஷன் அரிசிகளில் கிடக்கும் கற்கள் கண்களுக்கு கூட புலப்படாத வகையில் அரிசி மாதிரியே இருப்பதால் பற்கள் பல சமயங்களில் சேதமடைந்து விடுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் இவற்றை தவிர்த்து விடுகின்றனர். இதனால் அனைவரும் பயன்படுத்தும் வகையில் தரமான அரிசிகளை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்.

பள்ளிகளுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும்

ஹரிஸ்ராஜ்:- வீட்டில் தான் ரேஷன் அரிசி சாப்பாடு என்று பார்த்தால் பள்ளிகளில் கூட இதைத்தான் வழங்கி வருகின்றனர். இதனால் என்னைப்போன்ற மாணவர்கள் முறையாக சாப்பிட முடியாத சூழ்நிலையில், கல்வி பயில வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர். தரமான அரிசி வகைகளை பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவா்கள் கூறினா்.

Tags:    

மேலும் செய்திகள்