தமிழ்நாடு விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறை மறுப்பா? - அண்ணாமலை கண்டனம்

அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-12 15:16 GMT

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

தமிழகம் முழுவதும் விளையாட்டுத் துறையில் சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட பள்ளி மாணவர்கள், தங்கள் தாய் தந்தையினர் அரவணைப்பைத் தியாகம் செய்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பாக நடத்தப்படும், வெவ்வேறு ஊர்களில் உள்ள பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான விடுதிகளில், தங்கிப் பயின்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 1,900 பள்ளி மாணவர்கள், விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயின்று வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகை நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் நெருக்கமானது. வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். அனைத்துக் குழந்தைகளுக்கும், பொங்கல் பண்டிகை என்பது ஒவ்வொரு வருடமும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியது. இந்த நிலையில், வரும் 19-ம் தேதி அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் கேலோ விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களாக இந்த 1,900 மாணவர்களும் இருக்க வேண்டும் என்று கூறி, இவர்களுக்கான பொங்கல் விடுமுறை மறுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மாணவர்களும் பொங்கல் பண்டிகைக்கு விடுதிகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும், சொந்த ஊருக்குச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன். இதனால், மாணவர்களும், அவர்கள் வருகையை எதிர்பார்த்துப் பல மாதங்களாகக் காத்துக் கொண்டிருந்த பெற்றோர்களும் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 19-ம் தேதி அன்று நடக்கவிருக்கும் கேலோ விளையாட்டுப் போட்டிகளுக்காக, சிறு வயது பள்ளி மாணவர்களுக்குப் பொங்கல் விடுமுறை வழங்க மறுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், சென்னையில் நடக்கவிருக்கும் கேலோ விளையாட்டுப் போட்டிகளுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி விளையாட்டு வீரர்களை அழைத்து வரும்போது, அவர்களுக்கான தங்கும் வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்துவிட்டதாகவும் தெரியவில்லை. உடனடியாக, அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீண்ட காலமாகப் பெற்றோர்களைச் சந்திக்காமல் இருக்கும் குழந்தைகளை, திமுகவின் விளம்பர அரசியலுக்காக பலிகடா ஆக்க வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்