பயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வசதி செய்து தரப்படுமா?

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நிரந்தர குடிநீர் வசதி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.;

Update:2023-01-04 00:33 IST


விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நிரந்தர குடிநீர் வசதி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பழைய பஸ் நிலையம்

விருதுநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பஸ் நிலையத்திலிருந்து தான் அனைத்து புறநகர் பஸ்களும், டவுன் பஸ்களும் இயக்கப்படுகிறது. தினசரி பள்ளி செல்லும் குழந்தைகளும், கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களும், இந்த பஸ் நிலையத்திற்கு தான் வந்து செல்கின்றனர். மேலும் கிராமங்களில் இருந்து பொருட்கள் வாங்க வரும் கிராம மக்களும், வியாபாரிகளும் இந்த பஸ் நிலையத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பஸ் நிலைய புனரமைப்பு பணிக்கு முன்பு நிலையத்தில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் குளிரூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் செயல்பட்டு வந்தது. புனரமைப்பு பணியின் போது தற்காலிகமாக இந்த குடிநீர் மையம் அகற்றப்படுவதாக கூறப்பட்ட நிலையில் புனரமைப்பு பணி முடிந்த பின்பு மீண்டும் குளிரூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் பஸ் நிலையத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குடிநீர்தொட்டி

ஆனால் புனரமைப்புக்கு பணிக்கு பின்பு குடிநீர் வழங்கு மையம் மீண்டும் அமைக்கப்படாத நிலை உள்ளது. குடிநீர் வழங்கும் மையத்தின் குளிரூட்டும் எந்திரங்கள் மாயமாகிவிட்டன. பஸ் நிலையத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பும் தற்போது தேட வேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக சின்டெக்ஸ் தொட்டியை வைத்து அதில் வாரம் இரு முறை லாரிகள் மூலம் குடிநீர் ஏற்றும் நிலை உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே தற்காலிக வினியோக குடிநீரின் தூய்மை தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் விதிமுறைப்படி பஸ் நிலையத்தில் நிரந்தர குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்