பழனி நகராட்சிக்கு சிறப்புநிலை அந்தஸ்து வழங்கப்படுமா?
பழனியில் மக்கள்தொகை, வருவாய் அதிகரித்த நிலையில் சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
பழனி நகராட்சி
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியான பெரிய நகரமாக பழனி விளங்குகிறது. பழனி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 1894-ல் தொடங்கப்பட்ட பழனி நகராட்சி, 1988-ம் ஆண்டு தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது நகரின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.22 கோடியாக உள்ளது. நகரின் பரப்பளவு 6.65 சதுர கிலோமீட்டர் ஆகும். பழனியில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான முருகன் கோவில் உள்ளதால் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் தரிசனம் செய்ய வருகின்றனர்.
பக்தர்களை சார்ந்தே பழனி நகர், அடிவார பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், அலங்கார பொருட்கள், பஞ்சாமிர்த கடைகள் இயங்கி வருகிறது. இவ்வளவு முக்கியத்தும் பெற்ற பழனி நகரானது பல ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல் தேர்வு நிலை நகராட்சியாகவே உள்ளது.
எனவே பழனியை சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்வது எப்போது என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து பழனி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
சிறப்புநிலை
விமலபாண்டியன் (தி.மு.க. கவுன்சிலர்) : பழனி நகர் பகுதியில் வையாபுரிக்குளம், முருகன் கோவில் மலைப்பகுதி, ரெயில்-பஸ்நிலையம், பள்ளி மைதானங்கள் போன்றவை அதிகமாக அமைந்துள்ளன. இதனால் நகரின் குடியிருப்பு பகுதி சிறிய அளவில்தான் உள்ளது. போதிய இடவசதி இல்லாததால் நகரில் உரிய கட்டமைப்பு வசதிகள் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. எனவே நகரை ஒட்டியுள்ள ஊரக பகுதிகளை இணைத்து சிறப்புநிலை நகராட்சியாக உயர்த்தினால் அனைத்து மக்களுக்கும் போதிய வசதிகள் கிடைக்கும். இதேபோல் நகராட்சிக்கு வருவாய் ஆதாரங்களை அதிகப்படுத்துவதுடன், வர வேண்டிய நிதிகளை முறையாக வசூலித்து மக்கள் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள்
நடராஜன் (அ.தி.மு.க. கவுன்சிலர்) : பழனி நகராட்சி வருவாய் பெரும்பாலும் பக்தர்களின் வசதிக்கே அதிகமாக செலவிடப்படுகிறது. இதனால் பழனி மக்களுக்கு போதிய உட்கட்டமைப்பு செய்வதில் சிக்கல் உள்ளது. இதேபோல் சுற்றுலா வளர்ச்சிக்கென சிறப்பு திட்டம் கொண்டுவர வேண்டும். பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதால் பழனியில் சுற்றுலா வளர்ச்சி பெறும். அதேவேளையில் பழனி வையாபுரிக்குளத்தை சுத்தப்படுத்தி அதில் படகு குழாம் அமைத்தால் பக்தர்களுக்கு சுற்றுலா வசதியும் கிடைக்கும். மேலும் பஸ்நிலையத்தில் மீண்டும் கட்டமைப்பு வசதிகளை பெருக்கி ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்குமார் (பழனி) : பழனியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது பல ஆண்டுகாலமாக உள்ள மக்களின் கோரிக்கை. இவ்வாறு தனி மாவட்டமாக பழனி உதயமானால் கோதைமங்கலம், கலிக்கநாயக்கன்பட்டி போன்ற ஊரக பகுதியில் தான் அரசு துறை சார்ந்த கட்டிடங்கள் அமைய வாய்ப்புள்ளது. எனவே பழனி நகரை ஒட்டியுள்ள சிவகிரிப்பட்டி, கோதைமங்கலம், கலிக்கநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளை பழனியுடன் இணைத்து சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். இதன் மூலம் சுற்றுப்புற பகுதிகளும் வளர்ச்சி பெறும். இதற்கு அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.