அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படுமா?

வடகாடு தெற்குப்பட்டியில் கஜா புயலில் சேதமடைந்த அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படுமா? என்று மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-02-18 19:10 GMT

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஓட்டு கட்டிடங்கள் உள்ளன. தற்போது ஒரு ஓட்டு கட்டிடம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்ெறாரு ஓட்டு கட்டிடம் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் சிக்கி சேதமடைந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் ஓட்டு கட்டிடம் பூட்டப்பட்ட நிலையில் இருந்து வருகிறது.

மீதமுள்ள ஒரு ஓட்டு கட்டிடமும் மழை காலங்களில் மழை தண்ணீர் கசிவு ஏற்பட்டு மாணவர்களது பாடப்புத்தகங்கள் நனைந்து விடுவதாகவும், இதேபோல் பள்ளியில் உள்ள முக்கிய ஆவணங்கள் மழையால் நனைந்து சேதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கோரிக்கை

இப்பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், கூடுதல் கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில போதிய இடவசதி இல்லாததால் அருகாமையில் உள்ள சமையல் பொருட்கள் வைக்கும் அறையின் குறுகிய இடத்தில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்று வரக்கூடிய சூழல் நிலவி வருகிறது. இதனால் சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு அதற்கு பதிலாக, கூடுதல் கட்டிடங்களை விரைந்து கட்டித்தர இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு:-

வெறும் வாக்குறுதிகள்

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் துரைராஜ்:- பள்ளி வளாகத்தில் உள்ள பயனற்ற கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். இதுகுறித்து நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஊராட்சி அமைப்பு மற்றும் திருவரங்குளம் யூனியன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்துள்ளோம். ஆனால் 3 மற்றும் 6 மாதங்களில் திட்டம் நிறைவேற்றப்படும் என வெறும் வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் கவனத்திற்கு...

வடகாடு பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ்:- தற்போதுள்ள சூழலில் அரசு பள்ளியை தேடி பெரும்பாலான மக்கள் நாடி வரும் நிலையில், அரசு பள்ளிகளை நவீன காலத்திற்கு ஏற்ப புதிய கட்டமைப்புகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடங்களை அமைத்து தருவது அரசின் கடமையாகும். துறை சார்ந்த அதிகாரிகள் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

புதிய கான்கிரீட் கட்டிடம்

வடகாடு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்:- தொடக்கப்பள்ளியில் இப்பகுதிகளில் அதிக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் பள்ளி கட்டிடங்களை விரைவாக கட்டிக்கொடுத்து பள்ளி மாணவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திட்ட மதிப்பீடு அறிக்கை

திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷா ராணி:- பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடிப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்குமாறு பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பீட்டு அறிக்கை வந்ததும் பழைய கட்டிடம் இடிக்கப்படும். அதேபோன்று இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் தேவை குறித்து அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. கட்டிடம் ஒதுக்கீடு வந்ததும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்