நாகை அருங்காட்சியகம் இடமாற்றப்படுமா ?

இடிந்து விழும் நிலையில் உள்ள நாகை அருங்காட்சியக கட்டிடத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-05 18:45 GMT

இடிந்து விழும் நிலையில் உள்ள நாகை அருங்காட்சியக கட்டிடத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா தலங்கள்

நாகை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில், கோடியக்கரை பறவைகள் சரணாலயம் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன.நாகை மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலங்களில் மையப்பகுதியில் இருப்பதால் நாகை எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

அருங்காட்சியகம்

நாகை முதலாவது கடற்கரை சாலையில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள கற்சிலைகள், இசைக்கருவிகளான வீணை, தம்புரா ஆகியவை அரிய பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொல்லியல், கலை நாணயவியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், வேதியியல் தொடர்பான காட்சி பொருட்கள், புகைப்படங்கள், தொல்லியல் படிமங்கள், உலோகப்பொருட்கள், மரச் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தொன்மையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பார்வையாளர்களை கவரும் திமிங்கலத்தின் எலும்புக்கூடு

மேலும் வடக்கு பொய்கை நல்லூரில் கிடைத்த திமிங்கிலத்தின் எலும்புக்கூடு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் நாகையை சுற்றி உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு கண்காட்சிகள், பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாகை அருங்காட்சியக கட்டிடம் தற்போது சேதமடைந்து காட்சியளிக்கிறது. கட்டிடத்தில் ஆங்காங்கே மரங்கள் முளைத்துள்ளது. மேலும் இந்த கட்டிடம் ஆங்காங்கே பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே நாகை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக முக்கியமான இடத்தில் அருங்காட்சியகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்

கட்டிடம் இடிந்து விழுந்து, அங்குள்ள தொன்மை பொருட்கள் சேதம் அடையாமல் இருக்க பாழடைந்த கட்டிடத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். குறிப்பாக நாகை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு அனைத்து அலுவல் பணிகளும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த பழமையான நீதிமன்ற கட்டிடத்தில் அருங்காட்சியகத்தை இடமாற்றினால், புதிய பஸ் நிலையம் அருகில் இருப்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்று நாகை பகுதியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்