கோரையாறு தூர்வாரி சீரமைக்கப்படுமா?

கோட்டூர் பகுதியில் கோரையாறு தூர்வாரி சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-09-26 19:15 GMT

கோட்டூர்;

கோட்டூர் பகுதியில் கோரையாறு தூர்வாரி சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோரையாறு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த தட்டான்கோவிலில் இருந்து முத்துப்பேட்டை ஒன்றியம் ஜாம்பவான் ஓடை வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு கோரையாறு சென்று கடலில் கலக்கிறது. கோரையாற்றில் பைங்காட்டூர், நாணலூர், தேவதானம், வீரன்வயல், ஜாம்பவானோடை ஆகிய இடங்களில் சமநிலை பொறி (ரெகுலேட்டர்) அமைத்து பொண்ணுகொண்டானாறு, சாளுவனாறு, புதுப்பாண்டியாறு, பழம்பெறும்பாண்டியாறு, தூக்கணாங்குருவிஆறு ஆகிய பிரிவு ஆறுகள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 43 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குருவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி நடைபெற்றது.

உடைப்பு

இப்பகுதி விவசாயிகளின் உயிர் நாடியான கோரையாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள், கோரைப்புற்கள் வளர்ந்து, புதர் மண்டி காட்சி அளிக்கிறது. மேலும் பல இடங்களில் மணல் திட்டுகள் அதிகம் உள்ளது.இதனால் குறுவை காலத்தில் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. குறிப்பாக மழை வெள்ளக் காலங்களில் தண்ணீர் வடிய முடியாமல் பைங்காட்டூர், ஒரத்தூர் போன்ற கிராமங்களில் 4 முறை உடைப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது.

தூர்வார கோரிக்கை

கோரையாற்றின் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பால் பல இடங்களில் ஆற்றின் அகலம் குறைந்து விட்டது. ஆற்றில் மணல் எடுப்பவர்களால் ஆற்றங் கரை பல இடங்களில் பலவீனம் அடைந்து வருகிறது.இது குறித்து பாசனதாரர்கள் சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே கோரையாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்