கோம்ஸ் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?
கோத்தகிரி அருகே கோம்ஸ் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கோம்ஸ் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோம்ஸ் நீர்வீழ்ச்சி
சிறந்த கோடை வாசஸ்தலமாகவும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. பசுமை தவிழும் வனப்பகுதிகள், மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டம், பூங்காக்கள், சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், குன்னுார் சிம்ஸ் பூங்கா, லேம்ப்ஸ் ராக், டால்பின் நோஸ் காட்சி முனைகள், கோத்தகிரி கோடநாடு காட்சிமுனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, நேரு பூங்கா, லாங்வுட் சோலை போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.
இந்த சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றன. அதே நேரத்தில் அடையாளம் காணப்படாத பல அழகிய சுற்றுலா தலங்கள் அதிகளவில் உள்ளன. அதில் ஒன்று கோத்தகிரியில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் கோடநாடு பிரதான சாலையில், வனம் சூழ்ந்த பகுதியில் சுண்டட்டி கோம்ஸ் நீர்வீழ்ச்சி உள்ளது. மழை காலங்களில் குற்றால அருவியை போல் இங்கு தண்ணீர் கொட்டுவதை, உள்ளூர் மக்கள் ரசிப்பதுண்டு. எனவே, அப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
வரைபடத்தில் இடம்பெற வேண்டும்
கோத்தகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே.ராஜு:- இயற்கையின் கொடையான கோம்ஸ் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக மாற்ற உகந்த இடமாகும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், இங்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்தால், குற்றாலத்துக்கு செல்லும் மகிழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு இந்த மலையிலும் கிடைக்கும்.
குன்னியட்டியை சேர்ந்த ரமேஷ்:-
உயிலட்டி, கோம்ஸ் நீர்வீழ்ச்சிகள் வரைபடத்தில் இடம் பெறாமல் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு இந்த அழகிய நீர்வீழ்ச்சியை பற்றி தெரிவதில்லை. மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து, கோம்ஸ் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடங்களில், தேவையான பாதுகாப்பு தடுப்புகள், காட்சி கோபுரம் அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு இந்த நீர்வீழ்ச்சியை அடையாளம் காட்டும் விதமாக, சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற செய்தால், எதிர்காலத்தில் இப்பகுதி சிறந்த சுற்றுலா தலமாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு ஏற்படும்.
தொழில் மேம்படும்
சுற்றுலா வாகன ஓட்டுநர் சரவணன்:-
குன்னூர், ஊட்டி பகுதிகள் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளன. மேலும் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். ஆனால், கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் பிரசித்தி அடையாததால், இங்கு சுற்றுலா தொழில் நலிவடைந்து காணப்படுகிறது. கோத்தகிரி பகுதி மக்கள் தேயிலை, காய்கறி விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர்.
எனவே, சாலையோரங்களில் முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைத்தால், கோத்தகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுற்றுலா தொழில் மேம்படுவதுடன், சுற்றுலா வாகன தொழிலும் மேம்படும்.
சுற்றுலா பயணிகள்
கோத்தகிரி வாப்பு:-
கோத்தகிரி நேரு பூங்கா, இங்கிலாந்து அரசின் பசுமை நிழற்குடை விருது பெற்ற கோத்தகிரி லாங்வுட் சோலை, கேத்தரின் நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசு, வனத்துறை மற்றும் கோத்தகிரி பேரூராட்சி நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் அறியப்படாத சுண்டட்டி கோம்ஸ் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதிகளையும் மேம்படுத்தி, கோத்தகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.