புது ஆற்றில் கழிவுகள் கொட்டுவது தடுக்கப்படுமா?

புது ஆற்றில் கழிவுகள் கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2022-12-10 19:45 GMT

புது ஆற்றில் கழிவுகள் கொட்டுவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

காவிரிஆறு

தஞ்சை மாவட்டம் காவிரி ஆறுபாயும் மாவட்டம் ஆகும். இந்த காவிரி நதியின்கீழ் வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக்கால்வாய், குடமுருட்டி, அரசலாறு, பாமனியாறு, கண்ணனாறு, வீரசோழனாறு என 36-க் கும் மேற்பட்ட கிளை ஆறுகள் பிரிந்து செல்கின்றன.

இந்த ஆறுகள் மூலம் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12½ லட்சம் ஏக்கர் வரை பாசன வசதி பெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நெல், வாழை, கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம், எள், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு, பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

கல்லணைக்கல்வாய்

இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பாயும் ஆறுகளில் புதுஆறு எனப்படும் கல்லணைக்கால்வாயும் ஒன்று. இந்த ஆறு கல்லணையில் இருந்து பிரிந்து புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்கிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2½ லட்சம் ஏக்கர் வரை பாசன வசதி அளிக்கிறது. இந்த ஆறுகளில் கரைகளில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல கொட்டி வருகின்றனர். இந்த ஆறு தஞ்சை மாநகருக்குள் செல்கின்றன. இந்த ஆறுகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள் ஆற்றில் கரையில் கொட்டப்பட்டு, அது ஆற்றுக்குள் விழுந்த வண்ணம் உள்ளது.

குப்பைகள் கொட்டும் அவலம்

குறிப்பாக தஞ்சை மாநகருக்குள் நுழையும் பகுதியான சீனிவாசபுரத்தில் இருந்து 20 கண்பாலம் வரை பல்வேறு இடங்களில் குப்பைகள் ஆற்றில் கொட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக தஞ்சை எம்.கே.மூப்பனர் சாலையில் இருந்து நாகை சாலை வரையிலான பாலம் வரையில் மட்டும் 4-க்கும்மேற்பட்ட இடங்களில் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் கொட்டுவதால் ஆற்று நீர் மாசுபடுகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் சில இடங்களில் ஆற்றின் கரைகளில் குப்பைகளைகொட்டி தீ வைத்தும் எரிக்கப்படுகிறது. இந்த ஆற்றின் கரைகளில் எங்கு பார்த்தாலும் குடிமகன்கள் நின்று கொண்டு 24 மணி நேரமும் மது அருந்தி வருகிறார்கள். அதோடு காலி பாட்டில்களையும் ஆற்றில் வீசுகின்றனர். மேலும் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் தண்ணீர் அடித்துச்செல்லப்படும் போது ஆங்காங்கே ஆற்றின் குறுக்கே செல்லும் பாலத்தின் தூண்களை துற்றிலும் ஏராளமான தேங்கிக்கிடக்கிறது. ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் குப்பைகள்கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தடுக்க வேண்டும்

இது குறித்து சமூக ஆர்வலர் தஞ்சை அண்ணாநகரை சேர்ந்த பழ.ராஜேந்திரன் கூறுகையில், ஆறுகளில் குப்பைகள், பழைய கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசுபடுகிறது. மேலும் நோய் பரவும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் மாசுபடுகிறது. வழக்கமாக ஆறு, ஏரிகளில் ஏராளமானோர் குளிப்பார்கள். ஆனால் தற்போது ஆறுகளில் குளிப்பவர்களின் எண்ணிக்கை கூட நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. காரணம் ஆறுகளில் குப்பை கொட்டுவதோடு, தூய்மையாக இல்லாதது தான். பல இடங்களில் சாக்கடை நீர் கூட ஆறுகளில் தான் கலக்கிறது. மருத்துவ கழிவுகளையும், வீடுகளில் உள்ள செப்டிக் டேங் கழிவுகளை கூட ஆறுகளில் கொட்டுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆறுகளில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றார்.

அபராதம் விதிக்க வேண்டும்

சமூக ஆர்வலர் காந்தாராவ்ராசு கூறுகையில், ஆறுகளில் குளிப்பதற்கு மட்டும் அல்லாமல் கால்நடைகளுக்கு குடிநீருக்காகவும் ஆற்று தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதன் கரைகள் மற்றும் ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதோடு, மருத்துவ கழிவுகள். இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் அது நாளடையில் ஆற்றில் அடித்துச்செல்லப்படுவதோடு, தண்ணீரும் மாசுபடுகிறது. எனவே ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை கண்காணித்து, அவ்வாறு கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். குறிப்பாக பாசன பகுதிகளுக்கு செல்லும் வாய்க்கால் மதகுகளில் சென்று அடைபட்டு விடுவதால் பாசனமும் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நகர் பகுதிகளில் செல்லும் ஆற்றுப்பகுதியில் குறிப்பாக தஞ்சை பெரிய கோவில், ஆற்றுப்பாலம் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்