மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணி முன்கூட்டியே தொடங்கப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணி முன்கூட்டியே தொடங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-02-17 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணி முன்கூட்டியே தொடங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

முப்போக சாகுபடி

காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி மாதம் 28-ந் தேதி அணை மூடப்படுவது வழக்கம். காவிரிடெல்டாவில் மட்டும் சுமார் 30 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளன.

பல ஆண்டுகளாக மண் மேடிட்டு, தூர்ந்து போய் இருந்த இந்த வாய்க்கால்கள், வடிகால்களை ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரப்பட்டு வருகிறது.

தூர்வார சிறப்புநிதி

பிப்ரவரி மாதத்தில் வாய்க்கால்களில் தண்ணீர் நின்றுபோன பிறகு எந்தந்த வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என பொதுப்பணித்துறையினர் கணக்கெடுத்து திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைப்பதும், அதன்பின்னர் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அல்லது தனி அறிவிப்பாகவோ தமிழக முதல்-அமைச்சர் காவிரி டெல்டாவில் தூர்வார சிறப்புநிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பது வழக்கம்.

தூர்வாரும் பணிக்கான நிதியை முன்கூட்டியே அறிவித்தால் பணிகளும் முழுமையாக நிறைவுபெறும் என்பதால் நிதியை ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணியை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நெல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது

இதுகுறித்து டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.அன்பழகன் கூறுகையில், தமிழகத்தில் நெல் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த தண்ணீர் முழுமையாக பாசனத்திற்கு பயன்பட மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும். தூர்வாரும் பணிக்காக அரசு அதிக அளவில் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். முன்கூட்டியே டெண்டர் விட்டு உரிய நேரத்தில் தூர்வாரும் பணியை மேற்கொண்டால் மட்டுமே தரமானதாகவும் முழுமையாகவும் முடிக்க முடியும்.

விவசாயிகள் அவதி

ஆண்டுதோறும் தாமதமாக தூர்வாரும் பணி தொடங்கப்படுவதால் அரைகுறையாக பணி மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக கடைமடை பகுதிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் சிறு, குறு விவசாயிகள் பலர் ஒருபோகம் நெல் சாகுபடி செய்ய போதிய தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். தூர்வாரும் பணி முறைகேடு இன்றி நடைபெற அதிகாரிகள், விவசாயிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கண்காணிப்பு குழு

மயிலாடுதுறை மாவட்ட விவசாய பாதுகாப்பு நல சங்க தலைவர் பசுமை கலியமூர்த்தி கூறுகையில் டெல்டா மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களை கோடை காலத்திலேயே முன்கூட்டி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால் கோடை காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால்கள் தூர்வார ஏதுவாக வறண்டு காணப்படும்.

தூர்வாரும் பணிகளை கண்காணிக்க விவசாய சங்கத்தினரை கொண்டு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். தூர்வாரும் பணியை முன்கூட்டியே தொடங்கினால் பணிகளை தரமாக முடிக்க முடியும். இதனால் காவிரி நீர் கடைமடை வரை சென்று விவசாயிகள் பயன் அடைவார்கள்.

. சீர்காழியின் கடைமடை கிராமமான சின்னப் பெருந்தோட்டம் பகுதியில் உள்ள வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பெருந்தோட்டத்தில் கடலில் கலக்கும் செல்லன் ஆறு குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்