ஆறுகளின் கரைகளில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா?

திருமருகலில் உள்ள ஆறுகளின் கரைகளில் சமூக காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-10-30 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகலில் உள்ள ஆறுகளின் கரைகளில் சமூக காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக காடுகள்

நாகை மாவட்டம் திருமருகலில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் முடிகொண்டான் ஆறு, அரசலாறு, வளப்பாறு, திருமலைராஜன் ஆறு, வடக்கு புத்தாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இதன் கரைகளில் பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரை பாதுகாக்க கூடிய வகையிலும் சமூக காடுகள் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இதன் காரணமாக சுற்றுப்புற சூழல் பேணி காக்கப்படுவதோடு அரசு நிலங்களை பாதுகாக்கவும், மழை-வெள்ள காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கவும் முடியும்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுகளின் கரைகளை பலப்படுத்துவதற்காக மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. பெரும்பாலான இடங்களில் விளைச்சல் தரக்கூடிய தென்னை, பனை, மா ஆகிய மரங்கள் வளர்க்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தன. மேலும் தரிசு கரையோரங்களில் வாழைத்தோட்டம், வெற்றிலை கொடிகள் வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது ஆற்றங்கரைகளில் மரங்கள் வளர்க்கப்படாததால் மழை- வெள்ள காலங்களில் கரைகள் உடைந்து பெருத்த சேதம் ஏற்படுகிறது. ஆகவே திருமருகலில் உள்ள ஆற்றங்கரைகளை பலப்படுத்தும் வகையில் பயன்தரும் மரங்களை வளர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்