ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-06 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில் நிலையம்

ஆனைமலையை அடுத்த சுப்பையா கவுண்டன் புதூர் பகுதியில் ஆனைமலை ரோடு ெரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையம் வழியாக பாலக்காடு-திருச்செந்தூர் ெரயில் காலை, மாலை என இரு வேளைகளிலும் செல்கின்றன.

இந்தநிலையில் ரெயில் நிலையம் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக கழிப்பறை உபயோகிக்க முடியாத நிலையில் காட்சி பொருளாக பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இது தவிர மேற்கூரை இல்லாத காரணத்தால் மழை மற்றும் வெயில் நேரங்கிளல் திறந்தவெளியில் ரெயிலுக்காக பயணிகள் காத்திருக்கின்றனர்.

விஷ பூச்சிகள் அச்சுறுத்தல்

இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

ஆனைமலைரோடு ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. குழாய்கள் உடைந்து கிடக்கிறது. மேலும் வளாகத்தை சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் விஷ பூச்சிகள் அச்சுறுத்தல் நிலவுகிறது. இது தவிர அங்கு பட்டுப்போன ராட்சத மரம் ஒன்று நிற்கிறது. சூறாவளி காற்று வீசும்போது, அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. அங்குள்ள பாழடைந்த கட்டிடங்களில், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. அவர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே தூக்கி எறிந்து உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் காலையில் அங்கு வரும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

அடிப்படை வசதிகள்

இது மட்டுமின்றி பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வரும் வழியில் தெருவிளக்குகள் சரியாக ஒளிருவது இல்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த வழியாக இயக்கப்படும் பாலக்காடு-திருச்செந்தூர் ரெயிலில் போதிய பெட்டிகள் இணைக்கப்படுவது கிடையாது. இதனால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். மேலும் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்