கரடு, முரடாக காட்சியளிக்கும் பகண்டை- செங்காடு சாலை சீரமைக்கப்படுமா? மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரடு, முரடாக காட்சியளிக்கும் பகண்டை- செங்காடு சாலை சீரமைக்கப்படுமா? என்று மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-09-06 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பகண்டை கிராமத்தில் இருந்து செங்காடு வழியாக வளவனூர் சென்று அங்கிருந்து புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளுக்கு மாணவ- மாணவிகள் ஏராளமானோர் பள்ளி- கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்கள், வேலைக்கும் சென்று வருகின்றனர். அதுபோல் பொதுமக்கள், அத்தியாவசிய தேவைக்காக சென்றுவரவும், விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்கு செல்லவும் இந்த சாலை பிரதான சாலையாக உள்ளது.

இவ்வாறு போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த சாலையானது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு சாலையை அவ்வப்போது செப்பனிட தவறிவிட்டனர். இதன் விளைவு தற்போது சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து ஜல்லிக்கற்கள் சிதறியவாறு கரடு, முரடாகவும், சில இடங்களில் குண்டும்- குழியுமாகவும் காட்சியளிக்கிறது.

எப்போது சீரமைக்கப்படும்?

போக்குவரத்துக்கு முற்றிலும் லாயக்கற்ற நிலையில் இருக்கும் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பள்ளி- கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக வயல்வெளி போன்று மாறி விடுவதால் இந்த சாலையை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த பிரதான சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே அதிகாரிகள் இனியாவது இதில் தலையிட்டு இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்