புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படுமா?
புதுக்கோட்டையில் அரசு உயர் தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் தொடக்கப்பள்ளி
புதுக்கோட்டை நகரப்பகுதியில் அரசு உயர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை உள்ளது. இங்கு 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் போதுமான கட்டிட வசதி இல்லை. இதனால் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அருகே உள்ள நகர்மன்ற வளாகத்தில் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்களின் பெற்றோர் தரப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் பிரதிநிதிகளும் பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தனர்.
மழைநீர் ஒழுகுகிறது
ஆனால் இதுவரை பள்ளிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதற்கிடையில் நகர்மன்ற வளாகத்தில் வகுப்புகள் இயங்கி வருவதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் போது மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுகிறது. அதனால் மாணவ-மாணவிகள் நனையாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளி தரப்பில் எடுத்துள்ளனர்.
கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தி தரப்படும் என்ற அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டதாக பள்ளி தரப்பினரும், மாணவர்களின் பெற்றோர் தரப்பிலும் கருதுகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தி அடுத்த கல்வியாண்டிலாவது செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா காலக்கட்டத்தில்...
இது குறித்து மாணவரின் பெற்றோர் தரப்பில் செந்தில்குமாா் கூறியதாவது:- ''எனது 2 மகன்கள் இந்த பள்ளியில் தான் படிக்கின்றனர். ஒருவன் 4-ம் வகுப்பும், மற்றொருவன் 7-ம் வகுப்பும் படிக்கிறான். பள்ளியில் போதுமான இட வசதி இல்லாததால் வகுப்பறையில் மாணவர்கள் நெருங்கி அமர்ந்து தான் கல்வி கற்கின்றனர். பள்ளியின் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. ஆனால் இந்த இடத்தை பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கி தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக தான் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் தனியார் பள்ளியில் இருந்து மாணவர்களை அரசு பள்ளிக்கு மாற்றினர். இதில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த பள்ளியில் அதிகம் பேர் சேர்ந்தனர். அப்போது இருந்த அதிகாரிகள், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த சேர்க்கையை சம்மதித்தனர். அதன்பின் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கிய பின் வகுப்பறைகள் போதுமானதாக இல்லாததால் அருகே உள்ள நகர்மன்ற வளாகத்தில் சில வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மரத்தடியிலும் வகுப்புகள் நடைபெறுகிறது. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. மாணவர்கள் மதிய உணவு அருந்த கூட இடவசதி இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும்''.
தொகுதி மேம்பாட்டு நிதி
மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த பார்த்தீபன்:- ''பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், கட்டிட வசதி கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, தற்காலிகமாக பயிற்சி ஆசிரியர்களை நியமித்தனர். கூடுதல் கட்டிடம் தொடர்பாக அதன்பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும். கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபடி எதுவும் அதிகாரிகள் செய்யவில்லை. அடுத்த கல்வியாண்டிலாவது பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு தரப்பில் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் நிதி ஒதுக்கியும், தன்னார்வலர்களின் பங்களிப்போடும் பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்''.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுத முடிவு?
புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கட்டிடம் தேவை என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால் பல்வேறு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர். எனவே இந்த பள்ளிக்கு கட்டிட வசதி கோரி நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவ-மாணவிகள் தரப்பில் கடிதம் எழுதி அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.