புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில் மாவட்ட கூடுதல் நீதிமன்றங்கள் தொடங்கப்படுமா?

குளித்தலையில் ரூ.30 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பழைய சார்பு நீதிமன்ற கட்டிடத்தில் மாவட்ட கூடுதல் நீதிமன்றங்கள் தொடங்கப்படுமா? என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-08-27 18:59 GMT

ஒருங்கிணைந்த நீதிமன்றம்

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த கட்டிடங்களில் நீதிமன்றங்கள், வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள், கிளை சிறைச்சாலை, கருவூலம் போன்ற அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.

இவை 100 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்கள் என்பதாலும், பழுந்தடைந்த காரணத்தாலும் சில பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதுபோல் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றமும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

புதர்மண்டி கிடந்தது

குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீதிமன்றமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாம். 1994 வரை குற்றவியல் நீதிமன்றமும் பின்னர் சார்பு நீதிமன்றமும் இதில் செயல்பட்டு வந்துள்ளது. குளித்தலையில் கடந்த 2013-ல் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட தொடங்கியபிறகு, ஏற்கனவே சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வந்த கட்டிடம் எந்தவிதமான பயன்பாடில்லாமல் புதர்மண்டி கிடந்தது. இந்த கட்டிடத்தில் மகிளா நீதிமன்றம் தொடங்கவேண்டுமென பல ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை வக்கீல்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது.

ரூ.30 லட்சம் நிதிஒதுக்கீடு

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், இந்த கட்டிடத்தின் பழமை மாறாமல் இருப்பதற்காகவும், பழங்கால கட்டிடத்தை பாதுகாக்கும் விதமாகவும் இக்கட்டிடத்தை புதுபிக்க தமிழக அரசு மூலம் சுமார் ரூ.30 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாம்.

இதையடுத்து சார்பு நீதிமன்றமாக செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பழுதடைந்தும், சேதமான ஓடுகள், ஓடுகள் பொருத்த பயன்படுத்தப்பட்ட விட்டம் உள்பட மரத்தினாலான பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும் பழமை மாறாமல் அக்காலத்தில் இருந்ததுபோலவே இருக்கும் வகையில் புனரமைக்கும் பணிகள் குளித்தலை பொதுப்பணித்துறை (கட்டிடம்) மூலம் கடந்த 2019-ல் தொடங்கப்பட்டது.

கோரிக்கை

இக்கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் முற்றிலும் முடிவடைந்த பின்னர் பழமையை பறைசாற்றும் விதமாக காட்சி பொருளாக மக்கள் பார்வைக்காக வைக்கப்படுமா அல்லது ஏதேனும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுமா? என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படுமென அப்போது கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இந்த பழைய சார்பு நீதிமன்ற கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் கூடுதல் நீதிமன்றங்களை கொண்டு வர வேண்டுமென வக்கீல்கள் தெரிவித்து வருகின்றனர். அதுபோல அந்தக் கட்டிடத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தொடங்க வேண்டுமென்ற கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதியிடம் வக்கீல் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பயனுள்ளதாக இருக்கும்

இதுகுறித்து வக்கீல்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

சாகுல் அமீது:- குளித்தலையில் புனரமைக்கப்பட்டுள்ள பழைய சார்பு நீதிமன்ற கட்டிடத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் கொண்டுவர போதுமான அனைத்து வசதிகளும் உள்ளது. அப்படி கொண்டுவரப்பட்டால் பலதரப்பட்ட வழக்குகள் இங்கு நடக்கும். வக்கீல்களுக்கும் வழக்காடிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் கொண்டு வர வேண்டுமென பல மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதியிடமும், மாவட்ட நீதிபதியிடமும் வக்கீல் சங்கம் சார்பில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குளித்தலையில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டால் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும்.

அலைச்சல் குறையும்

தமிழ்ச்செல்வன்:- குளித்தலையில் பயன்பாட்டுக்கு தயாராக உள்ள பழைய சார்பு நீதிமன்ற கட்டிடத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் கொண்டுவரப்பட்டால் கரூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் பெரும் அலைச்சல் குறையும். அனைத்து வழக்குகளும் இங்கு நடக்கும் பட்சத்தில் வழக்காடிகள் மூலம் வழக்கை நடத்தும் வக்கீல்களை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி விவாதிக்க முடியும்.

ஆனால் குளித்தலையில் இருந்து கரூரில் உள்ள நீதிமன்றத்திற்கு அந்த வழக்கு தொடர்பான வக்கீல்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்போது அவர்களுக்கு பதிலாக வழக்கு விவரம் அறிய வேறு வக்கீல்களை பரிந்துரை செய்ய வேண்டி உள்ளது. இதன் காரணமாக வக்கீல்களுக்கு பொருளாதார ரீதியான பாதிப்பும் இருக்கிறது. தங்கள் கட்சிக்காரர்களின் (வழக்காடிகள்) மீதுள்ள உண்மைத் தன்மையை நீதிமன்றத்தில் அந்த வக்கீல்களால் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனால் வழக்காடிகளும் வக்கீல்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே குளித்தலையில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

இட வசதி இல்லை

மாதவன்:- குளித்தலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் ஒரு சார்பு நீதிமன்றம், 2 குற்றவியல் நீதிமன்றங்கள், ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை நடத்த போதுமான இட வசதி இங்கு இல்லை.

குளித்தலையில் தனி கட்டிடத்தில் இயங்கி வந்த சார்பு நீதிமன்றத்தின் பழைய கட்டிடம் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை மாற்றினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். அப்படி இல்லையெனில் வக்கீல் சங்கத்தின் கோரிக்கையின்படி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றமாகவும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்