பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்த கிடங்கு அமைக்கப்படுமா?

திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்த கிடங்கு அமைக்கப்படுமா? என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-06-14 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்த கிடங்கு அமைக்கப்படுமா? என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வாகனம் பறிமுதல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஊராட்சிகள், 92 சிறிய கிராமங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் திருத்துறைப்பூண்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட திருத்துறைப்பூண்டி, ஆலிவலம், கோட்டூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த வகையில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் விபத்து நேரங்களில் மீட்கப்படும் வாகனங்கள் அனைத்தும் போலீஸ் நிலையம் அருகில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஏலம் விடப்படும்

இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு முடிந்தவுடன் கோர்ட்டு அனுமதியுடன் ஏலம் விடப்படுகிறது. யாரும் உரிமை கோராத வாகனங்களும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஏலம் விடப்படுகிறது.

வழக்குகள் கோா்ட்டு கட்டுப்பாட்டுக்குள் வருவதால், விசாரணை முடிந்த பின்னரே உரியவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்படும். வழக்குகள் கோா்ட்டில் நீண்ட நாட்கள் நடப்பதால் வாகனங்களும் பல மாதங்கள் தாண்டியும் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் மேற்கூரை இல்லாத வெட்ட வெளியில் நிறுத்தப்படுவதால், வெயில், மழைக்காலங்களில் பழுதடைந்து சில வாரங்களில் துருப்பிடிக்கின்றன.

குடோன்அமைத்து பாதுகாக்க வேண்டும்

இந்த வாகனங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஏலம் விடும் பொழுது அது குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கோர்ட்டு உத்தரவை பெற்று அந்த வாகனங்களை வாகன உரிமையாளர்கள் பெறும்போது அவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாக பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மழை, வெயிலில் நிறுத்தாமல் கிடங்குஅமைத்து பாதுகாப்பாக நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் சுரேஷ்குமார், கூறுகையில், வழக்கு மற்றும் விபத்து தொடர்பாக கைப்பற்றப்படும் வாகனங்களை கோர்ட்டு வழக்குகள் முடிந்து அவற்றை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் பொழுது முற்றிலுமாக துருப்பிடித்து பயன்படுத்த முடியாத சூழலுக்கு வந்து விடுகிறது. மேலும் அந்த வாகனங்களை அரசு ஏலத்தில் விடும் பொழுது அதை நல்ல விலைக்கு யாரும் வாங்க மாட்டார்கள், இதற்கு காரணம் திறந்தவெளியில் பாதுகாப்பாற்ற நிலையில் வெயில் மற்றும் மழையில் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தான். எனவே அரசு புதிதாக நடவடிக்கை எடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கைப்பற்றப்படும் வாகனங்கள் பாதுகாப்பாக கிடங்கு அமைத்து நிறுத்த ஆவண செய்ய வேண்டும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்