கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா?

திருமுல்லைவாசலில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-06-29 18:45 GMT

சீர்காழி:

திருமுல்லைவாசலில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருமுல்லைவாசல் ஊராட்சி

சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் திருமுல்லைவாசல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மிக பெரியது. இந்த ஊராட்சியில் வழுதலைக்குடி, ராதாநல்லூர், தாழம்தொண்டி, திருமுல்லைவாசல், தொடுவாய், ஜீவா நகர், காந்தி நகர், இருதயநகர், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை கொண்டது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் அதிக அளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செல்லப் பிராணியான நாய்களையும் வளர்த்து வருகின்றனர்.

சிகிச்சை பெற நீண்ட தூரம் செல்கின்றனர்

திருமுல்லைவாசல் ஊராட்சியில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி இல்லாததால் இந்த ஊராட்சியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளுக்கு சிகிச்சை பெற சீர்காழி, எடமணல், கொள்ளிடம் ஆகிய நீண்ட தூரத்தில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர்.

இதனால் அடிக்கடி கால்நடைகள் சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழந்து வருகின்றன. மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற வேண்டுமானால் கூடுதல் செலவு செய்து கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்று சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.

அரசு கால்நடை ஆஸ்பத்திரி

இதனால் திருமுல்லைவாசல் ஊராட்சியிலேயே முழு நேர அல்லது பகுதி நேர கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமுல்லைவாசலில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளம் தமிழ்ச்செல்வன் கூறுகையில், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திலேயே திருமுல்லைவாசல் ஊராட்சி மிகப்பெரிய ஊராட்சி ஆகும். இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை பெற வேண்டுமானால் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழி அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே திருமுல்லைவாசலில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்