குடியாத்தம் பகுதியில் நலிவடையும் கைத்தறி தொழிலை காக்க ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா? நெசவாளர்கள் எதிர்பார்ப்பு
குடியாத்தம் பகுதியில் நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க, அங்கு ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா? என பல ஆண்டுகளாக நெசவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குடியாத்தம் பகுதியில் நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க, அங்கு ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா? என பல ஆண்டுகளாக நெசவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ெபயர் பெற்ற குடியாத்தம் லுங்கிகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கைத்தறி, தீப்பெட்டி, பீடி தொழில் என மூன்றும் மிக முக்கிய தொழில்களாக உள்ளன. இந்த மூன்று தொழில்கள் இப்பகுதிகளில் இருந்ததால் ஏராளமான தொழிலாளர்கள் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிறைந்திருந்தனர். தற்போது இந்த மூன்று தொழில்களும் படிப்படியாகக் குறைந்து விட்டது. தொழிலாளர்களும் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக, கைத்தறித்தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி லுங்கி ரகங்களுக்கு இந்தியா மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது. லுங்கிக்கு பெயர்போன குடியாத்தம் லுங்கிகளை அயல்நாட்டு மக்கள் மிகவும் விரும்பி வாங்கி வந்தனர். குடியாத்தம் பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான கைத்தறிகள் இருந்தன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு ெபற்றனர்.
பின்புலமாக இருக்கும் ைகத்தறி
கைத்தறி நெசவுத் தொழிலில் தாத்தா அவருக்கு பின் மகன் மற்றும் பேரன் எனத் தொன்று தொட்டு தலைமுறை தலைமுறைகளாக ஈடுபட்டு வந்தனர். குடியாத்தம் பகுதிையச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்போர் எனப் பல்வேறு பதவிகளில் உள்ளவர்களின் பின்புலத்ைதப் பார்த்தால் கைத்தறித் நெசவுத்தொழிலாளர் குடும்பங்களாகவே இருப்பார்கள்.
நெசவுத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும், அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக்கும் நெசவுத்தொழில் மிகவும் கை கொடுத்து வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ைவத்து, அவர்கள் தங்களின் குடும்பத்தையும், பிள்ளைகளையும் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறார்கள்.
அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி
குடியாத்தம் நகரில் திரும்பும் திசைெயல்லாம் கைத்தறி நெய்யும் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை ஏதேனும் ஒரு பகுதியில் கைத்தறித் நெசவு எந்திரம் இயங்கும் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும்.
சில ஆண்டுகள் முன்பு வரை குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி லுங்கிகள் வட மாநிலங்கள், இலங்கை, பர்மா, இந்தோனேசியா, அரபு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளின் பல பகுதிகளுக்கு நேரடியாகவும், சென்னைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்க்கு குடியாத்தம் கைத்தறி லுங்கிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால் கைத்தறித்தொழில் நன்றாக நடந்தது. ஆனால் ஒருசில நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் குடியாத்தம் பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த லுங்கிகள் பெருமளவு குறைந்து விட்டது.
5 ஆயிரம் கைத்தறிகளே இருக்கும் நிலை
தற்போது வட மாநிலங்களுக்கும், உள்ளூரிலும் மட்டுமே கைத்தறி லுங்கிகள் விற்பனையாகின்றன. இதனால் கைத்தறி தொழில் நசிந்து தற்போது 5 ஆயிரம் கைத்தறிகளே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியாத்தத்தில் குடியாத்தம் நகரம், காளியம்மன்பட்டி, செதுக்கரை, இந்திராநகர், காமாட்சியம்மன் பேட்டை, நெல்லூர்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறிகள் உள்ளன.
தற்போது இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேர் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு போதிய கூலி கிடைக்காததால் நாளுக்கு நாள் கைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது.
இதுகுறித்து கைத்தறி லுங்கி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி.யை நீக்க ேவண்டும்
கைத்தறிகள் மூலம் லுங்கிகள் உற்பத்தி செய்வது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ெசய்வதும் குறைந்து விட்டது. கடுமையான நூல் விலை ஏற்றம், 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைத்தறி உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கைத்தறி தொழிலை காப்பாற்ற உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைத்தறிக்கு தேவையான நூலை மானிய விலையில் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை முற்றிலும் நீக்க வேண்டும். வங்கி கடன் வழங்க வேண்டும். பல லட்ச ரூபாய் மதிப்பில் கைத்தறி லுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு அப்படியே இருப்பு வைக்கப்பட்டு ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின் ேபாது வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நெசவாளர்கள் கூறியதாவது:-
கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல்
இந்தியாவிலேயே மிகப் பழமையான தொழில் கைத்தறி நெசவு தொழில். ஒரு குடும்பமே சேர்ந்து ஒரு வாரத்துக்கு உழைத்தாலே 1500 ரூபாய் சம்பாதிப்பது கடினமாக உள்ளது. கைத்தறி நெசவாளர்கள் பெரும்பாலும் வறுமை நிலையிலேயே உள்ளனர். கைத்தறித் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. தற்போதுள்ள இளைஞர்கள் கைத்தறி தொழிலுக்கு வருவதே இல்லை.
கைத்தறி தொழிலில் ஈடுபட்டால் இளைஞர்களுக்கு பெண் தர மறுக்கிறார்கள். முன்பு ஒரு காலத்தில் கைத்தறி நெசவு செய்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து பிள்ளைகளை படிக்க வைத்தோம். பெண் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தோம். தற்போது சாதாரண கூலித் தொழிலாளியை விட மிகக் குறைவான கூலியே கைத்தறி நெசவாளர்களுக்கு கிடைக்கிறது. இந்தக் கூலியை உயர்த்தி வழங்கவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் லுங்கிகள் நேரடியாக கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்தும், அதன் தள்ளுபடி மானியத்தை நெசவாளர்களுக்கு வழங்கும் வகையிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூலியை உயர்த்தி வழங்க ேவண்டும்
குறிப்பாக குடியாத்தம் பகுதியில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டால் பல பகுதிகளில் இருந்து இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகள் வருவார்கள். இதனால் இப்பகுதியில் கைத்தறித் தொழில் வளர்ச்சி அடையும். தமிழக அரசு இதற்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் 29 உள்ளன. பட்டு கைத்தறி சங்கம் ஒன்று உள்ளது. இருப்பினும், நெசவாளர்களின் வாழ்க்கை நாளுக்குநாள் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. நெசவாளர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும். குறிப்பாக கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, நெசவாளர்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனப் பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
லுங்கிகள், பாலியஸ்டர் சேலைகள் உற்பத்தி
குடியாத்தம் பகுதியில் அதிகளவு கைத்தறி ெநசவில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் பலர் சரியான கூலி கிடைக்காததால் சில ஆண்டுகளாக விசைத்தறிக்கு மாறி உள்ளனர். குடியாத்தம் பகுதியில் சுமார் ஆயிரம் விசைத்தறிகள் இயங்குகின்றன. 3 ஆயிரம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறி தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதாவது:-
கைத்தறி தொழிலைபோல் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் உரிய கூலி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். விசைத்தறியில் அதிகளவில் லுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் குறைந்த அளவே விசைத்தறிகள் மூலம் லுங்கிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
லுங்கிைய தவிர பாலியஸ்டர் சேலைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. சேலை நெய்வோருக்கும் சரியாக கூலிகிடைப்பதில்லை. வெளியூருக்கு அனுப்பப்படும் சேலைகள் விற்பனையாகவில்லை என்றால் மொத்த உற்பத்தியாளர்கள் கூலியை குறைத்து விடுகின்றனர். இதனால் விசைத்தறி நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இலவச மின்சாரம்
விசைத்தறி நெசவாளர்கள் நலன் காக்க தற்போது வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்காக விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க வேண்டும். விசைத்தறி கூலியை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். கூலி உயர்வு ஒப்பந்த சட்டம் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும். விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் 5 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும்.
விசைத்தறி தொழிலாளர்கள் நலன் காக்க வங்கிகளில் கடன் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் கைத்தறி மற்றும் விசைத்தறிைய நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனை காக்க நெசவாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் தீர்வு
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கூறியதாவது:-
குடியாத்தம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகிேயார் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என சட்டமன்றத்திலும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.