அரியலூர் பஸ் நிலையத்தில் தற்காலிக பந்தல் அமைக்கப்படுமா?
திறந்தவெளியில் மழை, வெயிலில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளதால் அரியலூர் பஸ் நிலையத்தில் தற்காலிக பந்தல் அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
அரியலூர் பஸ் நிலையம்
அரியலூர் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் இங்குள்ள கடைகள் சிதிலமடைந்து இருப்பதால் அவ்வப்போது மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. எனவே புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சிதிலமடைந்த கட்டிடங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டன. மேலும் அங்கு புதிய பஸ்நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.7 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
தற்காலிக பந்தல்
இதையடுத்து, ஜெயங்கொண்டம் நகருக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் இரும்பு தகடுகளாலான கொட்டகை அமைத்து பயணிகள் நிற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால் அவர்கள் திறந்தவெளியில் மழையிலும், வெயிலிலும் நின்று வருகின்றனர்.
தற்போது குளிர் காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால் பகலில் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும். எனவே பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக பந்தல் அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.