அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படுமா?

நாங்கூர் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படுமா? என மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-03-29 18:45 GMT

திருவெண்காடு:

நாங்கூர் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படுமா? என மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அரசு மாணவர் விடுதி

திருவெண்காடு அருகே நாங்கூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் காத்திருப்பு, தென்னாம்பட்டினம், பெருந்தோட்டம், திருநகரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

தொலைவிலிருந்து வந்து கல்வி பயிலும் மாணவர்கள் நலன் கருதி இந்த பள்ளிக்கு அருகில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு, சீருடை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தரப்பபடுகிறது.

சேதமடைந்த கட்டிடம்

இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்ததால் கடந்த 3 ஆண்டுக்கு முன்னர் விடுதி மூடப்பட்டது. தற்போது மாணவர் விடுதி அதே பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வந்தனர்.

இந்த வாடகை கட்டிடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் மிகவும் சிரப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சேதமடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளி

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்த மாமல்லன் கூறுகையில், நாங்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி பழமை வாய்ந்த பள்ளியாகும். இந்தப் பள்ளியில் இந்த சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி தொலைவிலிருந்து கூட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளியாகும்.

தொலைவிலிருந்து வரும் மாணவர்களின் நலன் கருதி தங்கும் விடுதி இயங்கி வந்தது. தற்போது கட்டிடம் சேதமடைந்த காரணத்தால் வாடகை கட்டத்தில் இயங்கி வருகிறது.

புதிய கட்டிடம்

இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய மாணவர் விடுதி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இந்த பகுதி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்