ஆறுமுகநேரி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆறுமுகநேரி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Update: 2022-10-06 18:45 GMT

ஆறுமுகநேரி:

போக்குவரத்து மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையான ஆறுமுகநேரி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்களை தந்த தியாக பூமியாக ஆறுமுகநேரி திகழ்கிறது. தூக்குமேடை காசிராஜன், ராஜகோபால் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களும், மணிமுத்தாறு அணை கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி திரட்டி வழங்கி உறுதுணையாக இருந்த முன்னாள் எம்.பி. கே.டி.கோசல்ராம் போன்றோரையும் தந்த நகரமாகும்.

திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் ஆறுமுகபெருமானை தரிசிக்க செல்லும் வழியில் உள்ளதாலும், ஆற்றின் முகத்துவாரம் அருகில் இருப்பதாலும் ஆறுமுகநேரி என்று பெயர் பெற்றது.

ரெயில்வே கேட்

திருச்செந்தூர்- நெல்லை இடையே அமைந்துள்ள ரெயில் நிலையங்களில் அதிக நிலப்பரப்பு கொண்ட ரெயில் நிலையமாக ஆறுமுகநேரி திகழ்கிறது. மேலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையும் ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தை ஒட்டியவாறே கடந்து செல்கிறது. இங்கு ரெயில்வே கேட் அமைக்கப்பட்டு உள்ளது.

நெல்லை- திருச்செந்தூர் இடையே தினமும் ரெயில்கள் செல்லும்போது, ஆறுமுகநேரியில் ரெயில்வே கேட் மூடப்படுவதால் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.

மேம்பாலம் அமைக்க கோரிக்கை

மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவையும் ரெயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்து இருப்பதால் குறிப்பிட்ட இடங்களுக்கு உடனடியாக செல்ல முடியவில்லை. மேலும் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு போன்ற ஊர்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பக்தர்களும் ஆறுமுகநேரி ரெயில்வே கேட்டில் நீண்ட நேரம் தவம் கிடந்துதான் கடந்து செல்கின்றனர்.

நீண்ட நேரமாக மூடப்பட்ட ரெயில்வே கேட்ைட திறந்தவுடன் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆறுமுகநேரி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகநேரி ரெயில்வே கேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினரும், ரெயில்வே துறையினரும் நில அளவீடு செய்தனர். பின்னர் எந்த பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.

தீவில் சிக்குண்ட மக்களாக...

ஆறுமுகநேரி ெரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி:-

திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் மற்றும் பாலக்காடு பாசஞ்சர் ரெயில், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தை கடந்து செல்லும் போது, அங்குள்ள ரெயில்வே கேட்டை தினமும் 14 முறை மூடி திறக்கின்றனர். இதனால் அவசர காலங்களில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடிக்கு செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நோயாளிகள் பரிதவிக்கின்றனர்.

ஆறுமுகநேரியில் இருந்து காயல்பட்டினம் பைபாஸ் ரோடு வழியாக ஆத்தூருக்கு செல்ல நினைத்தாலும், ஆறுமுகநேரி பேயன்விளையில் ரெயில்வே கேட் உள்ளதால் அந்த வழியாக செல்ல முடியாது. ஆறுமுகநேரியில் இருந்து திருச்செந்தூர், குரும்பூர் வழியாகவோ அல்லது மூலைக்கரை வழியாகவோ ஆறுமுகநேரி சாகுபுரத்துக்கு செல்ல நினைத்தாலும், வீரபாண்டியன்பட்டினம் மற்றும் குரும்பூர் நல்லூரில் ரெயில்வே கேட் உள்ளதால் அந்த வழியாகவும் செல்ல முடியாது. இதனால் அவசர காலங்களில் தீவில் சிக்குண்டவர்களாக மக்கள் பரிதவிக்கின்றனர்.

தற்போது நெல்லை-திருச்செந்தூர் இடையிலான ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மின் இணைப்பு பொருத்தும் சிறப்பு ரெயில் என்ஜின்களும் அடிக்கடி செல்வதால் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனாலும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆறுமுகநேரி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்கி நிறைவேற்ற வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

ஆறுமுகநேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அமிர்தராஜ்:-

ரெயில்கள் கடந்து சென்ற பின்னர் ஆறுமுகநேரி ரெயில்வே கேட்டை திறந்தவுடன் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆறுமுகநேரி பஜார் வழியாக செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவசர காலங்களில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும்கூட ரெயில்வே கேட்டில் காத்திருப்பதால் நோயாளிகள் உயிரிழக்கும் அவலமும் உள்ளது.

தீர்வு

மேலும் திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேசுவரம் போன்ற கோவில்களுக்கு செல்லும் பக்தர்களும் ஆறுமுகநேரி ரெயில்வே கேட்டில் காத்திருந்த பின்னரே சுவாமியை தரிசிக்க செல்ல முடிகிறது. விழாக்காலங்களில் ஆறுமுகநேரி ரெயில்வே கேட்டில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரே ரெயில்வே கேட்டான இங்குதான் இன்னும் மேம்பாலம் அமைக்கப்படவில்லை. எனவே இங்கு ரெயில்ேவ மேம்பாலம் அமைப்பதுதான் ஒரே தீர்வாக அமையும்.

Tags:    

மேலும் செய்திகள்