உயிரிழப்புகளை தடுக்க விபத்து கால சிகிச்சை மையம் அமைக்கப்படுமா?

உயிரிழப்புகளை தடுக்க விபத்து கால சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-07 19:26 GMT

பெரம்பலூர்:

அடிக்கடி விபத்துகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. விபத்தில் சிக்குபவர்களை மீட்டு, உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ள அனைத்து வசதிகளைக் கொண்ட அரசு மருத்துவமனை நெடுஞ்சாலை பகுதியில் இல்லாததால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழக்கின்றனர்.இதை தவிர்க்க பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அவசர மற்றும் விபத்து கால சிகிச்சை மையம் இருந்திருந்தால், விபத்தில் சிக்கிய பலரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.

இலவசமாக வழங்கப்பட்ட இடம்

ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 1989-ம் ஆண்டு கிராம மக்களால் இடம் வாங்கப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படாமல், ஊட்டத்தூர் சாலையில் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆலத்தூர் தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் காரையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையை பாடாலூரில் கிராம மக்களால் இலவசமாக கொடுக்கப்பட்ட இடத்தில் மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது.

பாடாலூரில் அரசு மருத்துவமனை...

ஆனால் அதற்கு காரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாடாலூரில் அரசு மருத்துவமனை அமைப்பதற்காக கிராம மக்களால் இலவசமாக கொடுக்கப்பட்ட இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு மருத்துவமனை கட்ட கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி திடீரென்று அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த இடத்தை சிலர் கைப்பற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கிராம மக்களால் அந்த இடத்தில் பாடாலூர் அரசு மருத்துவமனை அமைய உள்ள இடம் என்று எழுதப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வரை வெறும் அறிவிப்பாகவே இருந்து விட்டநிலையில், அந்த பதாகை மட்டுமே அங்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் எண்ணத்தை தாங்கிக் கொண்டிருக்கிறது.

அவசர-விபத்து கால சிகிச்சை மையம்

தற்போதும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் சாலை விபத்துகளில் சிக்குவோர், சிகிச்சை பெற தாமதமாவதால் உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது. இதை தவிர்க்க, பாடாலூரில் நெடுஞ்சாலையோரம் மருத்துவமனைக்காக வழங்கப்பட்ட இடத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட அவசர மற்றும் விபத்து கால சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது.

உடனடி சிகிச்சை

இது குறித்து பாடாலூரை சேர்ந்த வேல்முருகன் கூறுகையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் சிகிச்சை பெற நகர்ப்பகுதியில் உள்ள பெரம்பலூருக்கு செல்ல வேண்டும். பெரம்பலூர் நகர்ப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். இதனால் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு போக்குவரத்து நெருக்கடியை கடந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விடுகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அதிக நேரம் ஆகும். பாடாலூரில் அரசு மருத்துவமனை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே உள்ளதால், சிறுவாச்சூர் முதல் திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கு ஏற்றதாக இருக்கும், என்றார்.

உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்

இரூரை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், பாடாலூரில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மருத்துவமனை அமைக்கப்பட்டால், விபத்தில் சிக்குபவர்களின் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். எனவே, பாடாலூரில் அதிநவீன வசதிகள் கொண்ட அவசர மற்றும் விபத்து கால சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்