மடவாமேடு கடற்கரையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
குடியிருப்பு பகுதியை கடல் அலைகள் நெருங்குவதால் மடவாமேடு கடற்கரையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குடியிருப்பு பகுதியை கடல் அலைகள் நெருங்குவதால் மடவாமேடு கடற்கரையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மீனவ கிராமம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மடவாமேடு மீனவர் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைவரும் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இங்கு கடந்த 5 ஆண்டு காலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரை பகுதி சுருங்கி விட்டது. இன்னும் 300 மீட்டர் தொலைவில் மீனவர்களின் குடியிருப்பு உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பகுதியில் அதிவேகமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாக மக்கள் கூறுகிறார்கள்.
கடல் சீற்றம்
அமாவாசை மற்றும் பவுர்ணமி ஆகிய நாட்களில் இங்கு கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் நாட்களில் மற்ற பகுதிகளை விட மடவாமேடு கடற்கரையில் அதிகமாக மண் அரிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
மடவாமேடு கிராமத்தில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு கொண்டிருப்பதால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் குடியிருப்பு பகுதி முழுவதும் கடல் அலை அடித்துச் செல்ல வாய்ப்புள்ளது. சென்ற ஆண்டு பருவ மழையின் போது அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டதால் அதிக அளவுக்கு மண்ணரிப்பு ஏற்பட்டு 800 மீட்டர் தூரத்துக்கு கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. தற்போது குடியிருப்புகளை கடல் அலைகள் நெருங்கி வருகின்றன.
தடுப்புச்சுவர்
குடியிருப்பு பகுதியை கடல் அலைகள் தொடுவதற்கு முன்பாகவே இங்கு கடற்கரையோரம் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தடுப்புச் சுவர் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம் மண் அரிப்பை தடுத்து நிறுத்தி குடியிருப்புகளையும் காப்பாற்ற முடியும்.
எனவே மடவாமேடு மீனவ கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மடவாமேடு கடற்கரையில் தடுப்புச்சுவர் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.