முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியால் இடம் பெயரும் வனவிலங்குகள்-இடையூறு செய்யக்கூடாது என வனத்துறை அறிவுரை

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியான காலநிலை தொடங்கியுள்ளது. இதனால் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெயருகிறது. இந்த சமயத்தில் சாலையை கடக்கும் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-21 18:45 GMT

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியான காலநிலை தொடங்கியுள்ளது. இதனால் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெயருகிறது. இந்த சமயத்தில் சாலையை கடக்கும் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இடம் பெயரும் வனவிலங்குகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் டிசம்பர் மாதங்கள் வரை தொடர் கனமழை பெய்வதால் முதுமலை வனம் பசுமையாக காணப்படும். இந்த காலகட்டத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

தற்போது கோடை காலமான இலையுதிர் காலம் தொடங்கி உள்ளதால் வறட்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் யானை போன்ற வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகிறது. மேலும் கரடி, புலி போன்ற வனவிலங்குகள் முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் உலா வருகிறது.

இடையூறு செய்யக்கூடாது

நேற்று மாலை மசினகுடி - மாயாறு இடையே கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. பின்னர் அப்பகுதியில் இருந்த இலந்தை மரத்தின் மீது ஏறி பழங்களை சாப்பிட முயன்றது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதேபோல் காட்டு யானைகளை சிலர் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவர்களை ஒரு காட்டு யானை விரட்டியது.

இதனால் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வறட்சியான காலநிலை தொடங்கி உள்ளதால் வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. இந்த சமயத்தில் சாலையோரம் காட்டு யானை, புலி, கரடி உள்பட வன விலங்குகள் உலா வரும்போது வாகன ஓட்டிகள் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்