காட்டாற்று வெள்ளம்; ஒகேனக்கல்லில் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Update: 2022-08-05 18:29 GMT

பென்னாகரம்,

கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 94 ஆயிரத்து 963 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரண்டி, ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆறு வெள்ளைக்காடாக காட்சியளித்தது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருந்தாலும் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனிடையே நேற்று மாலை நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்து கொண்டு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் ஒகேனக்கல்லில் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்