கொடைக்கானல் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் அருகே தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன.

Update: 2022-06-25 15:01 GMT

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சுவீடு, அஞ்சுரான்மந்தை, பாரதி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும், பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் நேற்று இர‌வு பேத்துப்பாறையில் உள்ள அசோகன், வடிவேல் ர‌த்தின‌க்குமார், க‌ண‌ப‌தி உள்பட 6 பேருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்குள் 3 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அப்போது அங்கு ப‌யிரிட‌ப்ப‌ட்டிருந்த‌ வாழை, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களையும் தின்று தீர்த்ததுடன், சேதப்படுத்தின. விடிய, விடிய தோட்டங்களுக்குள் முகாமிட்டிருந்த யானைகள், இன்று காலை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

இதற்கிடையே அசோகன் உள்பட 6 பேரும் தங்களது தோட்டத்திற்கு வந்தபோது, வாழை உள்ளிட்ட பயிர்களை யானைகள் நாசம் செய்திருந்ததை பார்த்து வேதனை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் விவசாயிகள் கூறுகையில், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்ச‌த்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் தனி கவனம் செலுத்தி பேத்துப்பாறை, அஞ்சுவீடு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்