மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பில் உலா வரும் காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்
மேட்டுப்பாளையம் அருகே பகல் நேரத்தில் குடியிருப்பில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானை கூட்டத்தோடு சேராமல் பாகுபலி யானை தனியாக சுற்றி வந்தது.
தற்போது அந்த யானை நெல்லிமலை காப்புக்காட்டு பகுதியில் யானை கூட்டங்களோடு சேர்ந்து, அடர்ந்த வனப்பகுதிகளில் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் பாகுபலி மற்றும் பிற காட்டு யானைகள் சமயபுரம் சாலையை கடந்து குடியிருப்புகள் வழியாக கல்லாறு வனப்பகுதிக்கு செல்கிறது.
பொதுமக்கள் அச்சம்
அதன் அருகே தோட்டங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கல்லாறு ஆற்றில் தாகம் தீர தண்ணீரை குடித்தும் வருகிறது. பின்னர் மீண்டும் அதிகாலை நேரத்தில் நெல்லிமலை பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்தநிலையில் பகல் நேரங்களில் சமயபுரம் சாலையை கடந்து குடியிருப்புகள் வழியாக காட்டு யானைகள் கல்லாறு வனப்பகுதிக்கு செல்லத் தொடங்கி உள்ளன. இரவு, பகல் எந்த நேரமும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.
யானைகளின் தொடர் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே நெல்லிமலை காப்புக்காடு பகுதியில் இருந்து பகல், இரவு நேரங்களில் வெளியேறும் காட்டு யானைகளை தடுத்து வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.