தோட்டங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் அருகே தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தின.

Update: 2022-06-10 16:06 GMT

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம், பார‌தி அண்ணாந‌க‌ர், புலியூர் உள்ளிட்ட‌ பகுதிகளில் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வ‌ருகின்றன. இதுகுறித்து வனத்துறையிடம் விவசாயிகள் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க‌வில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேத்துப்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி ம‌கேந்திர‌ன் என்ப‌வ‌ருடைய தோட்ட‌த்துக்குள் காட்டு யானைக‌ள் புகுந்தன. அங்கு ப‌யிரிட‌ப்ப‌ட்டிருந்த‌ வாழை மர‌ங்க‌ளை காட்டு யானைகள் சேத‌ப்படுத்தியது.  தோட்டத்துக்கு வந்த மகேந்திரன் தனது வாழ்வாதாரமாக இருந்த வாழை மரங்கள் நாசமானதை பார்த்து மனவேதனை அடைந்தார். இனியும் வனத்துறையை நம்பி விவசாயம் செய்ய முடியாது என 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை ஆத்திரத்தில் அவர் வெட்டி சாய்த்தார். அந்த வீடியோ காட்சிக‌ள் ச‌மூக‌ வ‌லைத‌லங்க‌ளில் வைர‌லாக‌ ப‌ர‌வி வ‌ருகிற‌து.

இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள கூட்டுக்காடு பகுதியில் காபி தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்தன. அங்கு பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு, பாக்கு மரம் மற்றும் வீடு போன்றவற்றை சேதப்படுத்தியது. இதனால் காபி தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு யானைகளால் விவசாய பயிர்கள், வீடுகள் சேதமாவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்