ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் ஒர்க் ஷாப்பை சேதப்படுத்தியது.
கூடலூர்,
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் ஒர்க் ஷாப்பை சேதப்படுத்தியது.
காட்டு யானைகள்
கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வழித்தடங்கள் அழிப்பு, மின்வேலிகள் அமைப்பு, வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கூடலூர் அருகே செளுக்காடி ஊருக்குள் 3 காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு நுழைந்தது. தொடர்ந்து சாலையில் நடந்து சென்றது. அப்போது வீடுகள் மற்றும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அதிர்ஷ்டவசமாக சேதப்படுத்த வில்லை. அப்பகுதியில் வளர்ந்திருந்த பாக்கு உள்ளிட்ட மரங்களை தின்று சேதப்படுத்தியது. ஊருக்குள் காட்டு யானைகள் வந்ததை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றது. அடிக்கடி ஊருக்குள் காட்டு யானைகள் வருவதால் பொதுமக்கள் நிம்மதி இழந்து உள்ளனர்.
கடையை சேதப்படுத்தியது
இதேபோல் கூடலூர் துப்புக்குட்டி பேட்டை பகுதிக்குள் காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து பாக்கு, வாழை மரங்களை தின்றது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்பை காட்டு யானை உடைத்தது. தொடர்ந்து உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகளை சேதப்படுத் தியது. பின்னர் இரவு முழுவதும் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அதிகாலையில் சென்றது. இதேபோல் கூடலூர் புஷ்பகிரி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி மற்றும் தனியார் பள்ளி வளாகத்திலும் 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானை வந்து சென்றது. கூடலூர் நகரின் மையப்பகுதிக்கு காட்டு யானை வர தொடங்கி உள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் காலை நேர நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.