தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்
கூடலூரில் தேயிலை தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்தன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
கூடலூர்,
கூடலூரில் தேயிலை தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்தன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
காட்டு யானைகள்
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் தினமும் வருகிறது. இந்த நிலையில் கோக்கால் மலையில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் ஒன்று நேற்று அதிகாலை கூடலூர் 4-ம் நம்பர் சாலையோரம் முகாமிட்டது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் சென்றது.
இதனால் வழக்கம்போல் பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு வந்த தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகளை கண்டு அச்சமடைந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டதால், பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதேபோல் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கூடலூருக்கு செல்ல முடியாமல் பீதி அடைந்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் கெவிப்பாரா பகுதியில் நுழைந்தன.
பொதுமக்கள் அச்சம்
இதேபோல் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையிலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. சில சமயங்களில் வாகன போக்குவரத்து தடைபடுகிறது. இருப்பினும் வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளாமல் உள்ளதால் காட்டு யானைகளால் அசம்பாவிதம்ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூரில் இருந்து 4-ம் நெம்பர் செல்லும் சாலையில் இரவு, பகல் என எந்த நேரத்திலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
பஸ் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே, யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றனர்.