அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. அவை சத்துணவு கூடத்தை சேதப்படுத்தின.;
வால்பாறை
ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. அவை சத்துணவு கூடத்தை சேதப்படுத்தின.
காட்டுயானை கூட்டம்
வால்பாறை வனப்பகுதிக்கு கேரள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகிறது. இவை கூட்டம் கூட்டமாக பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன. அவற்றை மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கண்காணித்து வருவதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வாகமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வந்த குட்டிகளுடன் கூடிய 11 யானைகள் கொண்ட கூட்டம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வால்பாறை அருகே ஆனைமுடி எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்தது.
அட்டகாசம்
தொடர்ந்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த சத்துணவு கூடத்தின் முன்பக்க அறையை உடைத்து உள்ளே சென்றது. பின்னர் 2 கதவுகளையும் உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு பருப்பு, சுண்டல் ஆகியவற்றை எடுத்து தின்றதோடு சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதை கண்ட தொழிலாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
எச்சரிக்கை
ஆனால் காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதிக்குள் புகுந்து உள்ளன. அவ்றறை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆனைமுடி, நல்லமுடி, தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.