தொழிலாளி வீட்டை உடைத்த காட்டு யானைகள்
நாடுகாணி அருகே தொழிலாளி வீட்டை காட்டு யானைகள் உடைத்தன. தொடர் அட்டகாசத்தால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்
நாடுகாணி அருகே தொழிலாளி வீட்டை காட்டு யானைகள் உடைத்தன. தொடர் அட்டகாசத்தால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
வீட்டை உடைத்தது
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நாடுகாணி அருகே புளியம்பாரா கத்தரித்தோடு பகுதியில் நேற்று அதிகாலை 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளி பெரமாதா என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தின.
தொடர்ந்து வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி உள்ளிட்ட தானியங்களை தின்றன. இதனால் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விரட்டும் பணி
இதனிடையே பெரமாதாவின் மகன் முருகதாஸ் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இதனால் மருமகள் சரண்யா, 2 கைக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெரமாதா உறவினர் வீட்டில் இரவு மட்டும் தங்கினார். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து யானைகள் அங்கிருந்து சென்றது. பின்னர் நாடுகாணி வனச்சரகர் வீரமணி தலைமையிலான வனத்துறையினர் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர்.
மனு அளித்தால் நடவடிக்கை
அப்போது கிராம மக்கள் கூறும்போது, காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவற்றை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு மற்றொரு வீட்டையும் காட்டு யானைகள் உடைத்து விட்டது.
எனவே தொடர் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவற்றை பிடிக்க வேண்டும் என்றனர். அதற்கு, எழுத்துப்பூர்வமாக மனுக்கள் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதியளித்தனர்.