கோவில், டீக்கடையை உடைத்த காட்டுயானைகள்

உபாசி பகுதியில் கோவில், டீக்கடையை காட்டுயானைகள் உடைத்தன. இதனால் பாதுகாப்பாக இருக்க எஸ்டேட் மக்களுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-01-20 18:45 GMT

வால்பாறை

உபாசி பகுதியில் கோவில், டீக்கடையை காட்டுயானைகள் உடைத்தன. இதனால் பாதுகாப்பாக இருக்க எஸ்டேட் மக்களுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் கடந்த 13-ந் தேதி முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாரியம்மன் கோவில்களில் திருவிழா நடைபெற்று வந்தது. இதையொட்டி பட்டாசு வெடித்து மேள-தாளங்களுடன் கரகாட்டம் போன்றவை நடந்ததால், காட்டுயானைகள் வனப்பகுதிகளை விட்டு வெளியே வராமல் இருந்தது. இந்த நிலையில் கோவில் திருவிழாக்கள் முடிந்து விட்டதால், மீண்டும் காட்டுயானைகள் வனப் பகுதியை விட்டு வெளியே வர தொடங்கி விட்டன. அவை உபாசி பகுதியில் உள்ள அரசு நலப்பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையத்தின் கட்டிடத்தை உடைத்து அரிசியை தின்றும், சிதறடித்தும் அட்டகாசம் செய்தன.

டீக்கடை

மேலும் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலின் சுவரை உடைத்தன. பின்னர் துதிக்கையை உள்ளே விட்டு பொருட்களை சேதப்படுத்தின. இது தவிர பத்தாம்பாத்தி ரேஷன் கடையின் கதவை உடைத்து அரிசிகளை தின்றன. மேலும் சிங்கோனா பகுதியில் பள்ளி கட்டிடத்தை உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் டீக்கடையை உடைத்தன. காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், எஸ்டேட் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்