அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட்டு கேள்வி

தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2024-12-16 10:16 GMT

கோப்புப்படம் 

சென்னை,

புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள எனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை" என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வக்கீல், தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத்துறை கூறியது தொடர்பாக செய்தித்தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது எனக் கூறிய நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ் அறிக்கையை தாக்கல் செய்தார். அதைப் பார்த்த நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியான நிலையில் கடந்த 13-ம் தேதிதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாள்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? இது போன்ற புகார்களை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா எனக் கேள்வி எழுப்பினர். தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வு பெற அனுமதிக்கக்கூடாது எனவும், இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினர்.

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வக்கீல், 2022-ம் ஆண்டு மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியானதில் இருந்து, அதுதொடர்பாக முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு, அதன்பின்னர் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்