பந்தலூர் அருகே வேனை வழிமறித்து தாக்கிய காட்டுயானைகள்;உயிர் தப்பிய பெண் தொழிலாளர்கள்

பந்தலூர் அருகே வேனை வழிமறித்து காட்டுயானைகள் தாக்கின. இதில் வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள் தப்பியோடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2023-08-18 18:45 GMT

பந்தலூர்: பந்தலூர் அருகே வேனை வழிமறித்து காட்டுயானைகள் தாக்கின. இதில் வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள் தப்பியோடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள்

பந்தலூர் அருகே சேரம்பாடி, கண்ணம்பள்ளி, கோரஞ்சால், சப்பந்தோடு, சோலாடி உள்பட பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டி உள்ளன. இதனால் இப்பகுதிகளில் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் தோட்டங்களில் நுழைந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதுதவிர்த்து சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்துவதும், வாகனங்களை வழிமறித்து சிலரை தாக்கியும் வருகின்றன. இதனால் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் காட்டுயானைகளால் அச்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கண்ணம்பள்ளி அருகே உள்ள ஒரு தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல 10-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், கொளப்பள்ளி நெல்லியாளம் டேன்டீயை சேர்ந்த சண்முகலிங்கம் என்பவரின் வேனில் சென்றனர்.

வேனை வழிமறித்து தாக்கின

கண்ணம்பள்ளியில் இருந்து சிறிது தூரம் சென்றபோது சாலையில் திடீரென வேனை, 5 காட்டுயானைகள் வழிமறித்தன. இதனால் வேனில் இருந்த பெண் தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து காட்டுயானைகள், வேனை தாக்கி சேதப்படுத்தின. இதற்கிடையே வேனில் இருந்து தொழிலாளர்கள் உடனே கீழே இறங்கி வெகுதூரம் ஓடி காட்டுயானைகள் தாக்குதலுக்கு ஆளாகாமல் உயிர் தப்பினர். இதுபற்றி சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பரபரப்பு

அதன்படி சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின்பேரில் வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது காட்டுயானைகள் வனத்துறையினரை துரத்தி வந்து தாக்க முயன்றது. ஆனாலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காட்டுயானைகளிடம் இருந்து வனத்துறையினர் தப்பித்தனர். தொடர்ந்து காட்டுயானைகள் வனத்துறையினரின் 3 மோட்டார் சைக்கிளை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் சுதாரித்துக்கொண்ட வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். மேலும் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்