தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானை, காட்டெருமைகள்

வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை, காட்டெருமைகள் முகாமிட்டன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Update: 2023-02-07 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை, காட்டெருமைகள் முகாமிட்டன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

வனவிலங்குகள் நடமாட்டம்

வால்பாறை வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டெருமை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியில் தற்போது கடுமையான வெயில் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுத்தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் மற்றும் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாகவும், தனியாகவும் வால்பாறை எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இதில் காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்்து வருகின்றனர்.

காட்டு யானை முகாம்

இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் லோயர் பாரளை எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானை ஒன்றும், காட்டெருமை குட்டிகளுடன் முகாமிட்டு நின்றன. யானையும், காட்டெருமைகளும் ஒன்றாக தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருந்ததால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்தனர். மேலும் அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது அடிக்கடி காட்டு யானைகள் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இதனால் மனித-வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

வனத்துறை எச்சரிக்கை

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, வால்பாறை வனப்பகுதியில் கடும் வெயில் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள் ஆங்காங்கே தேயிலை தோட்ட பகுதிகள், சாலையோரங்களில் முகாமிட்டு வருகின்றன. எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் வனப்பகுதிக்கு காய்ந்த விறகுகளை சேகரிக்க, நீரோடைகளில் துணி துவைக்க செல்வதை தவிர்க்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக வீட்டை விட்டு தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்