காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
மசினகுடி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
மசினகுடி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டு யானை தாக்கியது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா தெங்குமரஹடா புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் பசுவராஜ் (வயது 42), கூலித்தொழிலாளி. இந்தநிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெங்குமரஹடாவில் இருந்து மசினகுடி அருகே பொக்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் இரவில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்தநிலையில் நேற்று அதிகாலை பொக்காபுரத்தில் பசுவராஜ் காட்டு யானை தாக்கி உயிரிழந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மசினகுடி போலீசார் மற்றும் சிங்காரா வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதை தொடர்ந்து போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பசுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகம் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூருக்கு அடுத்தபடியாக மசினகுடி பகுதியில் காட்டு யானைகளால் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே, வனத்துறையினர் மாலை அல்லது காலையில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மசினகுடி சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே காலை மற்றும் இரவில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே நடமாட கூடாது என வனத்துறையினர் மற்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.