வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை

தேவாலா அருகே தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானை சேதப்படுத்தியது. குரைத்த நாயையும் காட்டு யானை கொன்றது.

Update: 2022-06-07 14:49 GMT

கூடலூர், ஜூன்.8-

தேவாலா அருகே தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானை சேதப்படுத்தியது. குரைத்த நாயையும் காட்டு யானை கொன்றது.

வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூர் தாலுகா தேவாலா கைதகொல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ரமேஷ், கதிர்வேல் ஆகிய தொழிலாளர்களின் வீடுகளை தாக்கி சூறையாடியது. மேலும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து தின்றது.

பின்னர் துணி துவைக்கும் எந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை உடைத்தது. அப்போது சத்தம் கேட்டு தொழிலாளர்கள் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் காட்டு யானையை பார்த்து குரைத்தது. இதனால் ஆவேசம் அடைந்த காட்டு யானை வளர்ப்பு நாயை தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்றது.

பொதுமக்கள் பீதி

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தங்களது வீடுகளில் பதுங்கி கொண்டனர். இதற்கிடையில் பொதுமக்கள், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பலாப்பழ சீசன் நிலவுவதால் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியில் பலா உள்ளிட்ட காட்டு யானைகள் விரும்பி உண்ணக்கூடிய மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் காட்டு யானைகள் ஊருக்குள் தொடர்ந்து வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியாக செல்லக்கூடாது

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாலை அல்லது இரவில் பொதுமக்கள் தனியாக செல்லக்கூடாது. வீடுகளின் அருகில் விளைந்துள்ள பலா காய்களை உடனுக்குடன் பறிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்