நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி ஒற்றை காட்டுயானை அட்டகாசம்
பேரணாம்பட்டு அருகே நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி ஒற்றை காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் நிலத்துக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி ஒற்றை காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் நிலத்துக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
காட்டுயானை பிளிறல்
ஆந்திர எல்லை வனப்பகுதியான கடப்பனத்தம் பகுதியில் இருந்து ஒற்றை காட்டுயானை பேரணாம்பட்டு அருகே கோட்டையூர் வனப்பகுதிக்குள் வந்து நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் பிளிறியவாறு பயங்கர அட்டகாசத்தில் ஈடுபட்டது.
இதனால், கோட்டையூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்காகச் சென்ற விவசாயிகள் காட்டுயானை பிளிறியதைக் கேட்டு பீதியடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் பேரணாம்பட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும், பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார் தலைமையில் வனவர் தயாளன், வனக் காப்பாளர் புருஷோத்தமன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்கள், விவசாயிகள் உதவியோடு தீப்பந்தங்களை கொளுத்தியும், பட்டாசு மற்றும் பாணங்களை வெடித்தும் நள்ளிரவு ஒரு மணி வரை போராடி ஒற்றை காட்டுயானையை விரட்டியடித்தனர்.
விவசாய பயிர் சேதம்
வனத்துறைக்கு போக்குக்காட்டிய ஒற்றை காட்டுயானை பத்தலப்பல்லி வழியாக மசிகம் கிராமம் தேன்மலை வனப் பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
மசிகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கமலநாதன் என்பவர் முக்கால் ஏக்கரில் நெல் பயிரிட்டு அறுவடை செய்து நிலத்தில் குவியலாக உலரவைத்திருந்த ெநற்கதிர்களை ஒற்றை காட்டுயானை சாப்பிட்டும், காலால் மிதித்தும் துவம்சம் செய்து விட்டு, அருகில் உள்ள சுப்பிரமணிக்கு சொந்தமான வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து குலை தள்ளியிருந்த 7 வாழை மரங்களை கீழே சாய்த்தது.
அதில் இருந்த வாழைக்காய்களை சாப்பிட்டு நாசப்படுத்தியது. அந்த வாழைத்தோட்டத்துக்கு அருகில் உள்ள பாபுவின் நிலத்தில் நடவு செய்திருந்த கரும்புகளை சேதப்படுத்தியது.
விவசாயிகள் பீதி
அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பாலூர் வனப்பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானை அருகில் உள்ள மாச்சம்பட்டு, ரெட்டிகிணறு வனப்பகுதியையொட்டி உள்ள மற்றொரு பாபு என்பவருக்குச் சொந்தமான மாந்தோட்டத்துக்குள் புகுந்து அங்குள்ள மா மரக்கிளைகளை முறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. மாமரங்களில் காய்த்திருந்த மாங்காய்களை உதிர்த்து சேதப்படுத்தியது.
ஒற்றை காட்டுயானை அட்டகாசத்தால் விவசாயிகள் மாலை, இரவில் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு காவலுக்குச் செல்ல முடியாமல் பீதியடைந்துள்ளனர்.