காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும்

பயிர்களை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2022-12-23 17:50 GMT

பயிர்களை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று காலை நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள், புகார்கள், குறைகளை தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் சில கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

காட்டுப்பன்றிகள் தொல்லை

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

பேரணாம்பட்டு பகுதியில் யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. விளை நிலங்களுக்கு வரும் யானைகள் பயிர்களை நாசம் செய்கிறது. விவசாயிகள் உயிருக்கும் ஆபத்து உள்ளது. விளை நிலங்களுக்குள் யானைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களது உயிர்களையும், விவசாய பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறை சார்பில் முள்வேலி அமையுங்கள் என்கின்றனர். ஆனால் வேலியை, யானைகள் எளிதாக தாண்டி வந்து விடுகிறது.

உயர் அதிகாரிகள் வேறு மொழி பேசுபவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எங்களது பிரச்சினைகளை புரியவைப்பதில் கடினமாக உள்ளது. யானை வராமல் இருக்க மின்வேலி அமைத்தல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு வழியை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுப்பன்றி தொல்லையும் அதிகமாக உள்ளது. வன அதிகாரிகளும் அதை கண்டு கொள்வதில்லை. காட்டு பன்றிகளை விவசாயிகள் சுட்டுக் கொல்ல அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட வன அலுவலர் தலைமையில் விவசாயிகளுக்கான கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

பஸ்கள் இல்லை

மேல்அரசம்பட்டுக்கு தனியார் பஸ்கள் ஏராளமாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது மாலை 7 மணிக்கு பின்னர் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ஆட்டோவில் அதிக தொகை கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு பஸ் இயக்க வேண்டும்.

எள் பயிர். மாசு புகையை குறைக்கும் செடியாக உள்ளது. இந்தச் செடி பயிரிடுவதால் மாசுவை கட்டுப்படுத்த முடியும். எனவே நகர் பகுதியில் இந்த செடியை பயிரிடுவதற்கான நடவடிக்கை எடுப்பதுடன், இது தொடர்பான ஆராய்ச்சியையும் மேற்கொள்ள வேண்டும். கரும்புச்சாறு, பிரிட்ஜில் வைக்கும் பொழுது அது குளிர்வடைவதில்லை. இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

பாலாற்றை பாதுகாக்க வேண்டும்

ராஜாதோப்பு அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். வேலூர் மாவட்டத்திற்கு பழச்சாறு தொழிற்சாலை தனியாக கட்ட வேண்டும். திருமணி பகுதியில் பாலாற்றில் தரைப்பாலம் கட்டப்பட வேண்டும். லத்தேரி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு பரவும் நோய்களை குணமாக்க சித்த மருத்துவத்தை பயன்படுத்த அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக உள்ளது. விவசாயிகளின் உயிர் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆம்பூர், பேரணாம்பட்டு என பல்வேறு இடங்களில் தொழிற்சாலை கழிவுநீர் கலக்கும் நிலை உள்ளது. அந்தப் பகுதிகளை கண்டறிந்து அங்கு கழிவுநீர் ஆற்றில் கலக்காத வகையில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். பாலாறு நீரின் சுத்தத்தை பாதுகாப்பது கடமையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்