கல்லால் அடித்து மனைவி கொலை

தஞ்சை அருகே குடும்ப தகராறில், கல்லால் அடித்து மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-31 20:25 GMT

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை அம்மாகுளம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் துரைமாணிக்கம்(வயது 36). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(32). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் துரைமாணிக்கம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

ஏன் குடித்துவிட்டு வந்து இருக்கிறீர்கள்? என ராஜேஸ்வரி கேள்வி கேட்டதால் ஆத்திரம் அடைந்த துரைமாணிக்கம் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறு முற்றி அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த துரைமாணிக்கம், மனைவியை தாக்கினார். மேலும் வீட்டிற்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து ராஜேஸ்வரியின் தலையில் அடித்தார்.

கொலை

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால், பதற்றம் அடைந்த துரைமாணிக்கம் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்ட தகவலை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராஜேஸ்வரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்த துரைமாணிக்கத்தை கைது செய்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்