கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி-மகள் கண்ணீர் விட்டு கதறல்

கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி-மகள் கண்ணீர் விட்டு கதறினர்.

Update: 2022-09-12 19:35 GMT

சவுதியில் வெல்டர் வேலை

திருச்சி மாவட்டம் வாத்தலை வடக்கு சித்தாம்பூர் காவேரிபாளையத்தை சேர்ந்தவர் அன்னக்கிளி. இவருடைய கணவர் சின்னமுத்துபுரவியான்(வயது 52). இவர் கடந்த 10 ஆண்டுகளாக துபாய் உள்பட பல நாடுகளில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சவுதியில் வெல்டர் வேலைக்காக சென்றார். கடந்த 7-ந் தேதி சின்னமுத்துபுரவியான் மனைவிக்கு போன் செய்து பேசியுள்ளார். பின்னர் 8-ந் தேதி அன்னக்கிளி தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவருடன் பணியாற்றிய நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை என்றும், அவரை தான் தேடி வருகிறோம் என்றும் கூறி உள்ளனர்.

திடீர் சாவு

உடனே அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி அன்னக்கிளி கூறியுள்ளார். தொடர்ந்து அவரை தேடி வருவதாக கூறிய அவர்கள் நேற்று முன்தினம் அன்னக்கிளிக்கு போன் செய்து சின்னமுத்துபுரவியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறிதுநேரத்தில் மீண்டும் போன் செய்து அவர் இறந்து விட்டதாகவும் கூறி உள்ளனர். இதைக்கேட்ட அன்னக்கிளி அதிர்ச்சி அடைந்தார். தனது கணவருக்கு என்ன ஆயிற்று என முறையான தகவலை தெரிவிக்காமல் திடீரென இறந்து விட்டதாக கூறியதை கேட்டு கதறி அழுதார். நேற்று காலை அவர் தனது மகள் நிவேதாவுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டர் பிரதீப் குமாரிடம் சவுதியில் மர்மமாக இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனு அளித்தார்.

முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

இது குறித்து அன்னக்கிளி கூறுகையில், எனது கணவருக்கு உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டது எனக் கூட முழுமையாக தெரிவிக்காமல் அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இனி அனாதையாக தவித்து வரும் நான் எனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன். எனது மகளை எப்படி கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினார். மேலும் அவரும், அவரது மகளும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

Tags:    

மேலும் செய்திகள்